சமீபகாலமாக தங்கம் தொடர்ந்து புதிய உச்சங்களை தொட்டு வருவதால், முதலீட்டாளர்களின் கவனம் அதன் மீது திரும்பியுள்ளது. ஆனால், தங்கத்தின் நீண்டகால வரலாற்றை பார்க்கும்போது, அதன் விலை எப்போதும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்காது என்பது தெளிவாகிறது. பெரிய விலையேற்றத்துக்கு பிறகு, தங்கம் பல ஆண்டுகள் புதிய உச்சத்தை தொடாமல் ஒரே நிலையில் தேங்கி நிற்கும் தன்மை கொண்டது. எனவே, தற்போதைய விலை உயர்வை மட்டும் அடிப்படையாக கொண்டு தங்கத்தில் முதலீட்டை அதிகரிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என 'ஐகுளோபல் ஆல்டர்நேட்' நிறுவனர் சி.கே. சிவராம் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலம் காத்திருக்க வைத்த தங்கம்: கடந்த 1980ம் ஆண்டில் தங்கம் அப்போதைய உச்சத்தை தொட்டது. அந்த உச்சத்தை மீண்டும் கடக்க தங்கத்துக்கு கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆனது. அதேபோல, 2011ம் ஆண்டில் புதிய உச்சத்தை தொட்ட பிறகு, பல ஆண்டுகள் அந்த அளவை சுற்றியோ அல்லது அதற்கு கீழேயோ தங்கம் வர்த்தகமானது. அடுத்த குறிப்பிடத்தக்க விலை உயர்வை எட்டுவதற்கு கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் ஆனது. எனவே, தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் வேகமாக உயர்ந்தாலும், நீண்ட காலத்தில் அதே வேகத்தில் தொடர்ந்து உயர வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது தெரிகிறது. இப்போது வேகமாக உயர காரணம்?: இந்த வரலாற்று பின்னணியில் தற்போதைய நிலையை பார்க்க வேண்டியது அவசியம். தற்போது தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் 14 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு அவுன்ஸ் கிட்டத்தட்ட 4,600 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. கடந்த ஓராண்டில் இதன் உயர்வு கிட்டத்தட்ட 35 சதவீதமாக உள்ளது. நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 4 முதல் 5 மாதங்கள் தங்கத்தின் விலையில் திருத்தம் ஏற்பட்டது. ஒரு அவுன்ஸ் தங்கம் 3,700 டாலருக்கும் கீழே செல்லலாம் என்ற கணிப்புகளும் இருந்தன. ஆனால், அதன்பிறகு தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. அமெரிக்க அரசின் கடன் கிட்டத்தட்ட 40 லட்சம் கோடி டாலரை நெருங்குவது, பணத்தின் மதிப்பு குறையும் என்ற அச்சம், அமெரிக்க அரசு பத்திரங்களின் வருவாயில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை தங்கத்துக்கு ஆதரவாக உள்ளன. மேலும், ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களிடம் உள்ள டாலர் சொத்துகள் தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் டாலரின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக, டாலர் பலவீனமடைவது தங்கத்தின் விலைக்கு சாதகமாக இருக்கும்.
Galleryபாதுகாப்பு; செல்வத்தை பெருக்குவதற்கு அல்ல: இந்திய குடும்பங்களிடம் 36,000 டன்களுக்கும் அதிகமான தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல தலைமுறைகளாக சேகரிக்கப்பட்டு வரும் தங்கம், பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், போர் போன்ற காலங்களில் குடும்பங்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கி வருகிறது. ஆனால், தங்கத்தை செல்வத்தை பல மடங்கு பெருக்கும் முதலீடாக பார்ப்பதைவிட, போர்ட்போலியோவுக்கு பாதுகாப்பு வழங்கும் ஒரு முதலீடாக பார்ப்பதே பொருத்தமானது.பொதுவாக 5 முதல் 10 சதவீதம் வரை தங்கத்துக்கு ஒதுக்குவது போதுமானதாக இருக்கலாம். இதற்கு மேல் ஒதுக்குவது, தங்கம் நீண்ட காலம் புதிய உச்சத்தை எட்டாமல் இருக்கும் சூழலில், போர்ட்போலியோவின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கலாம். எனவே, தங்கத்தின் அடுத்த விலை இலக்கை கணிப்பதைவிட, அது உங்கள் போர்ட்போலியோவில் எந்த நோக்கத்துக்காகவும், எந்த அளவிலும் இருக்க வேண்டும் என்பதில்தான் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். செல்வத்தை பெருக்கும் முதலீடாக தங்கத்தை பார்ப்பதைவிட, போர்ட்போலியோவுக்கு பாதுகாப்பு வழங்கும் ஒன்றாக பார்ப்பதே பொருத்தமானது