ஹாவேரி: கர்நாடகாவில் நின்றிருந்த லாரி மீது டெம்போ டிராவலர்ஸ் வாகனம் மோதியதில், வாகனத்தில் பயணம் செய்த, மாநில பார்வையற்றோர் கால்பந்து அணி கேப்டன் மானசா உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவிலுக்குச் சென்றுவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டது.கர்நாடகாவின் ஷிவமொகா மாவட்டம் எம்மே ஹட்டி கிராமத்தைச் சேர்ந்த, 17 பேர், நேற்று முன்தினம் டெம்போ டிராவலர்ஸ் வாகனத்தில் ஆன்மிக சுற்றுலா சென்றனர். பெலகாவி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சவதத்தி எல்லம்மா கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். தீயணைப்பு துறை
பின், சொந்த ஊருக்கு திரும்பினர். வழியில் அனைவரும் ஒரு ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்டு விட்டு, மீண்டும் வாகனத்தில் ஏறினர். இந்த வாகனம், ஷிவமொகாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை 3:30 மணியளவில், ஹாவேரி மாவட்டம் குண்டனஹள்ளி கிராஸ் அருகில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, டெம்போ டிராவலர்ஸ் வாகனம் பயங்கரமாக மோதியது.இதில், வாகனத்தின் முன்பக்கம் முழுதும் சின்னாபின்னமாக நொறுங்கியது. வாகனத்தில் பயணம் செய்தவர்கள் உடல் நசுங்கி இறந்தனர். படுகாயமடைந்தவர்கள் காப்பாற்றும்படி கதறினர்.முக்கியமான தேசிய நெடுஞ்சாலை என்பதால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உதவிக்கு வந்தனர். ஆனால், நொறுங்கிய வாகனத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.இதற்கிடையில், போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். இறந்த நிலையில் ஏழு பெண்கள், நான்கு ஆண்கள், இரண்டு குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. ஐந்து பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இறந்தவர்கள் யார் என்பது அடையாளம் காணப்பட்டது. ஓட்டுனர் ஆதர்ஷ், 23, பரசுராம், 45, பாக்யா, 40, நாகேஷ், 50, விசாலாட்சி, 50, சுபத்ரா பாய், 65, புண்யா, 50, மஞ்சுளா பாய், 57, மானசா, 24, ரூபா, 40, மஞ்சுளா, 50, மற்றும் 4, 6 வயதில் இரண்டு குழந்தைகள் அடங்குவர். முதல்கட்ட விசாரணை
இதில், இறந்த மானசா, மாநில பார்வையற்றோர் கால்பந்து அணியின் கேப்டன் ஆவார். ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்று இலக்கு வைத்து, பெங்களூரில் பயின்று வந்தார். இவரது தாய் பாக்யாவும் விபத்தில் இறந்தார். ஓட்டுனர் திடீரென துாங்கியதால், விபத்து நடந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.