உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4ம் கட்ட லோக்சபா தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!

4ம் கட்ட லோக்சபா தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : நான்காம் கட்ட லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. 10 மாநிலங்களில், 96 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையடுத்து, அந்த மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.நாடு முழுதும் 18வது லோக்சபாவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஏழு கட்டங்களாக நடக்கிறது.கடந்த ஏப்., 19ல் நடந்த முதற்கட்ட தேர்தலில் 102 தொகுதிகளுக்கும், ஏப்., 26ல் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கும், மே 3ல் நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில், மூன்று கட்ட தேர்தல்களையும் சேர்த்து, 283 தொகுதிகளுக்கு இதுவரை ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.

ஓட்டுப்பதிவு

இந்நிலையில், நான்காம் கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.இதன்படி, ஆந்திராவில் 25; பீஹாரில் ஐந்து; ஜார்க்கண்டில் நான்கு; மத்திய பிரதேசத்தில் எட்டு; மஹாராஷ்டிராவில் 11; ஒடிசாவில் நான்கு; தெலுங்கானாவில் 17; உத்தர பிரதேசத்தில் 13; மேற்கு வங்கத்தில் எட்டு மற்றும் யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மேலும், ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 147 தொகுதிகளில், முதற்கட்டமாக 28 தொகுதிகளுக்கும் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இத்தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5:00 மணியுடன் நிறைவடைந்தது.நான்காம் கட்ட தேர்தல் பரப்புரையில், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் மற்றும் அக்கட்சி தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதே போல், காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டு, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.நான்காம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் தான், காங்., வெளிநாட்டு பிரிவு தலைவராக இருந்த சாம் பிட்ரோடா, இந்தியர்கள் நிறம் குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை திடமாக பிடித்துக் கொண்ட பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள், காங்கிரசையும், அக்கட்சித் தலைவர்களையும் சரமாரியாக விமர்சித்தனர். அதே சமயம், அதானி - அம்பானி குறித்து பிரதமர் மோடி விமர்சித்த விவகாரத்தை, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் எடுத்துக்காட்டி ஓட்டு சேகரித்தனர். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கன்னாஜ் தொகுதியிலும்; தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா ஸ்ரீநகர் தொகுதியிலும்; பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பெகுசராய் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

ஐந்தாம் கட்டம்

மேலும், லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பஹரம்பூர் தொகுதியிலும், திரிணமுல் காங்., நிர்வாகியும், பார்லி.,யில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், எம்.பி., பதவியில் இருந்து நீக்கப்பட்டவருமான மஹுவா மொய்த்ரா கிருஷ்ணா நகர் தொகுதியிலும், ஆந்திரா காங்., தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா கடப்பா தொகுதியிலும் களம் காண்கின்றனர்.இதைத் தொடர்ந்து, வரும் 20ல் ஐந்தாம் கட்ட லோக்சபா தேர்தலில், எட்டு மாநிலங்களில், 49 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை