புதுடில்லி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தின், 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒரே நேரத்தில் உடல்நிலை சரியில்லை எனக்கூறி விடுப்பு எடுத்ததால், அந்நிறுவனத்தின் 90க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணியர் அவதி அடைந்தனர்.ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தை, 2021 அக்., முதல் டாடா குழுமம் நிர்வகித்து வருகிறது. ஏர் இந்தியாவின் ஒரு பிரிவாக இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எதிர்ப்பு
சமீபத்தில் பணி தொடர்பாக டாடா குழுமம் வெளியிட்ட அறிவிப்புக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஊழியர்களை நடத்துவதில் சமத்துவம் இல்லை என்றும், நிர்வாகம் தவறாக நிர்வகிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 100க்கும் மேற்பட்ட விமான ஊழியர்கள், ஒரே நேரத்தில் உடல்நிலை சரியில்லை எனக் கூறி விடுப்பு எடுத்தனர். இதனால், நேற்று முன்தினம் இரவு முதல், நிறுவனத்தின் 90க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. பெங்களூரு, டில்லி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொச்சி, கண்ணுார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், நுாற்றுக்கணக்கான பயணியர் கடும் அவதி அடைந்தனர். பெரும்பாலான பயணியருக்கு, விமான நிலையம் வந்த பின்தான், விமானம் ரத்து செய்யப்பட்ட தகவல் தெரிந்தது.இதுகுறித்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:கடந்த 7ம் தேதி இரவு முதல் ஊழியர்கள் பணிக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளதால், கடைசி நேரத்தில் சேவையை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பயணியரின் அசவுகரியத்துக்கு மன்னிப்பு கோருகிறோம். விடுப்பு
பயணியரின் முழு பணம் திருப்பித் தரப்படும் அல்லது வேறு நாளில் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும். மேலும், ஊழியர்களின் விடுப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து பேச்சு நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
பயணியர் போராட்டம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பயணியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு செல்லவிருந்தனர்.இதுகுறித்து பயணியர் கூறியதாவது:விமான நிலையம் வந்து பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பின்தான், விமானம் ரத்து செய்யப்பட்ட தகவல் எங்களுக்கு தெரிய வந்துள்ளது. வேலை நிமித்தமாக நாங்கள் செல்கிறோம். குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்லவில்லை என்றால், எங்களது வேலை பறிபோய்விடும்; மேலும் விசாக்களும் காலாவதியாகி விடும். பணத்தை திருப்பித் தருவதாகக் கூறும் நிறுவனம், எங்களது வேலை போய்விட்டால் வாங்கித் தருமா?இவ்வாறு அவர்கள் கூறினர்.