உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயம், 12 பசுக்களை வளர்த்து கை நிறைய சம்பாதிக்கும் விவசாயி

விவசாயம், 12 பசுக்களை வளர்த்து கை நிறைய சம்பாதிக்கும் விவசாயி

கதக் மாவட்டம், முண்டரகி தாலுகா, பூதிஹாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹாலேசா மனோஹரப்பா லிங்கஷெட்டர். இவருக்கு 4.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.இதில் 2 ஏக்கரில் மக்காச்சோளம் விளைவிக்கிறார். மீதி 2.5 ஏக்கரில், தக்காளி, கத்ரிக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகள் விளைகின்றன. நிலத்தின் ஓரத்தில், ஆறு மா மரங்கள், நான்கு சப்போட்டா மரங்கள், நான்கு தென்னை மரங்களை வளர்க்கிறார்.காய்கறிகளால் தினமும் பணம் சம்பாதிக்கும் அவர், செழிப்புடன் இருக்கிறார். வெவ்வேறு பழ மரங்களும் வளர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.

60 - 70 லிட்டர் பால்

இது தவிர, 12 ஜெர்சி பசுக்களையும் வளர்க்கிறார். இவற்றின் மூலம், தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் சேர்த்து, 60 - 70 லிட்டர் பால் கறக்கிறார். வீட்டிற்கு தேவையான ஒரு லிட்டர் பாலை வைத்துக் கொண்டு, மீதியை கிராமத்தில் உள்ள கே.எம்.எப்., கூட்டுறவு சங்கத்துக்கு விற்பனை செய்கிறார்.ஒரு லிட்டர் பால் 35 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். நிலத்தில் புற்களை வளர்த்து பசுக்களுக்கு வழங்குகிறார். சத்தான உணவும் வழங்குவதால், பால் நன்றாக வருவதாக கூறுகிறார். பசுக்களை வளர்ப்பதற்கு ஒரு ஊழியரை நியமித்துள்ளார்.பால் விற்பதன் வாயிலாக மட்டுமே, மாதந்தோறும் 60,000 முதல், 70,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். 2007ல் வெறும் இரண்டு பசுக்கள் வைத்திருந்த அவர், தன் திறமையால் தற்போது கூடுதல் பசுக்களை வளர்க்கிறார். கிராமத்தின் மாதிரி விவசாயியாக திகழ்கிறார்.

நடமாடும் கடை

காலை, மாலையில் விவசாயம் பார்க்கும் ஹாலேசா, இடையில் டாடா ஏஸ் வாகனம் மூலம், நடமாடும் சில்லறை கடை நடத்துகிறார். கிராமத்தை சுற்றி உள்ள குக்கிராமங்களுக்குச் சென்று வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்கிறார்.இதன் மூலம், மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக பெருமையுடன் சொல்கிறார். இவருக்கு, மொத்த குடும்பமும் ஒத்துழைப்பு தருவதால், சாதிக்க முடிகிறது என்று கூறுகிறார். இவரது திறமையை கண்டு, மற்ற விவசாயிகளும் ஆலோசனை பெற்றுச் செல்கின்றனர்.ஹாலேசா கூறியதாவது:விரும்பி செய்தால், எந்த துறையிலும் சாதனை படைக்க முடியும். திட்டமிட்டு உழைத்தால், வெற்றி உறுதி. விவசாயம் செய்வதுடன், மற்ற பணியிலும் ஈடுபட்டால், கை நிறைய சம்பாதிக்கலாம்.வறட்சி காலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலையில், மற்ற வேலைகளில் சம்பாதிக்க முடிந்தது. முடியாது என்று இருக்காமல், முடியும் என்று நினைத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்- நமது நிருபர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை