உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவே காரணம்! முதன்முறையாக மவுனம் கலைத்த ஹசீனா; மீண்டும் திரும்பி வருவேன் என்றும் அறிவிப்பு

அமெரிக்காவே காரணம்! முதன்முறையாக மவுனம் கலைத்த ஹசீனா; மீண்டும் திரும்பி வருவேன் என்றும் அறிவிப்பு

புதுடில்லி : 'என் அரசை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டது. வங்கதேசத்தில் இருந்து நான் வெளியேற அமெரிக்கா தான் காரணம்' என, அந்நாட்டில் இருந்து தப்பி வந்த பின், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, அவாமி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு தப்பி வந்தார். வங்கதேசத்தில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு தற்போது ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது.

சூழ்ச்சி

பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, டாக்கா இல்லத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன், நாட்டு மக்களிடையே ஷேக் ஹசீனா உரையாற்ற விரும்பியதாகவும், ஆனால், போராட்டக்காரர்கள் வீட்டை முற்றுகையிட்டதால், உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுரைப்படி, உரையாற்றாமல் வெளியேறியதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், நாட்டு மக்களிடம் உரையாற்ற இருந்த குறிப்பு தொடர்பாக, தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஷேக் ஹசீனா எழுதிய கடிதம் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.அதில் அவர் கூறியுள்ளதாவது:வன்முறையில் இறப்பவர்களின் உடல்களை பார்க்கும் சக்தி எனக்கு இல்லை. இதற்காகவே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தேன். மாணவர்களின் சடலங்களை வைத்து ஆட்சிக்கு வர எதிரிகள் விரும்பினர். அதை நான் அனுமதிக்கவில்லை. வங்கதேசத்துக்கு சொந்தமான செயின்ட் மார்ட்டின் தீவின் இறையாண்மையை ஒப்படைத்து விட்டு, வங்க கடல் பகுதியில் அமெரிக்காவை ஆட்சி செய்ய அனுமதித்திருந்தால், நான் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்க முடியும். ஆனால், அதை நான் செய்யவில்லை. பிரிவினைவாதிகளின் சூழ்ச்சிக்கு ஆளாக வேண்டாம். செயின்ட் மார்ட்டின் தீவில் விமான தளம் அமைக்க அமெரிக்கா விரும்பியது. அதற்கு நாம் இணங்கவில்லை. நீங்கள் என்னை தேர்ந்தெடுத்ததால், நான் உங்கள் தலைவரானேன். வங்கதேச மக்களே என் பலம். அவர்களே என்னை விரும்பவில்லை; அதனால் வெளியேறினேன். அவாமி லீக் கட்சி எப்போதும் மீண்டு வந்துள்ளது. நம்பிக்கையை இழக்கக்கூடாது; நான் விரைவில் திரும்பி வருவேன். நான் தோற்று விட்டேன்; ஆனால், வங்கதேச மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

சதித்திட்டம்

மாணவர்களை நான் ஒருபோதும், 'ரசாக்கர்'கள் என அழைக்கவில்லை. உங்களை துாண்டுவதற்காக என் வார்த்தைகள் திரிக்கப்பட்டன. இது தொடர்பாக, முழு வீடியோவைப் பாருங்கள். என் அரசை கவிழ்க்க மிகப்பெரிய சதி தீட்டப்பட்டது. நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வந்தது. வாய்ப்பு கிடைத்திருந்தால், இதை என் உரையில் கூறியிருப்பேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கதேச சுதந்திர போராட்டத்தின் போது, பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட ஒரு துணை ராணுவ படைப்பிரிவு தான், ரசாக்கர் என அழைக்கப்பட்டது. இந்த படைப்பிரிவினர், வங்க தேசத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டனர். சமீபத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை, ஹசீனா, ரசாக்கர்கள் என கூறியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, போராட்டத்தில் வன்முறை அதிகரித்தது.இதற்கிடையே, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் மீது நிலுவையில் இருந்த ஊழல் குற்றச்சாட்டிலிருந்து நேற்று அவர் விடுவிக்கப்பட்டார்.

எதிர்க்கட்சி மறுப்பு

ஷேக் ஹசீனாவின் குற்றச்சாட்டுகள் குறித்து, முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின், பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சியின் பொதுச்செயலர் மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கிர் நேற்று கூறியதாவது: வங்கதேசத்தில் ராணுவ தளத்தை அமைக்க, அமெரிக்கா வற்புறுத்தியதாக ஷேக் ஹசீனா கூறியது முற்றிலும் தவறானது. அத்தகைய பேச்சுகள் ஒருபோதும் நடக்கவில்லை. நாட்டின் பிரதமராக, 15 ஆண்டுகள் இருந்துவிட்டு, இது போன்ற பொறுப்பற்ற கருத்துகளை அவர் தெரிவித்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தவறான ஆட்சி மற்றும் நாட்டை ஒழுங்காக ஆட்சி செய்யத் தவறியதே, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேற காரணம். இதை ஒப்புக் கொள்ளாமல், மற்றவர்கள் மீது அவர் குற்றஞ்சாட்டுவது கேலிக்கூத்தாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

செயின்ட் மார்ட்டின் தீவு

வங்க கடல் பகுதியில் வங்கதேசத்திலிருந்து 9 கி.மீ., தொலைவிலும், மியான்மரிலிருந்து 8 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ள செயின்ட் மார்ட்டின் தீவு, வங்கதேசத்துக்கு சொந்தமானது. இதற்கு மியான்மரும் நீண்ட காலமாக உரிமை கோரி வந்தது. சுற்றுலா பயணியரின் சொர்க்கமாக திகழும் இந்த தீவில் தேங்காய் விளைச்சல் அதிகம்; மீன்பிடி தொழிலும் ஜோராக நடக்கிறது. வங்கதேசத்தின் ஒரே பவளப்பாறை தீவு என்றும் இது அழைக்கப்படுகிறது. தேங்காய் அதிகம் விளைவதால், 'கோகனட் ஐலண்ட்' என்றும் இது அழைக்கப்படுகிறது. வங்கக்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்காக இந்த தீவில் விமான தளம் அமைக்க அமெரிக்கா விரும்பியதாகவும், இது குறித்து வங்கதேசத்துக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாகவும் ஹசீனா ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ