| ADDED : ஆக 10, 2024 11:16 PM
பெங்களூரு: ஐந்து ரூபாய் சில்லறை விஷயத்தில், பி.எம்.டி.சி., பஸ்சில், பயணியருடன் தகராறு செய்த நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.பெங்களூரின் ஹெப்பாலில் இருந்து, சந்தாபுராவுக்கு சில நாட்களுக்கு முன்பு, பி.எம்.டி.சி., பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் பயணம் செய்த அபிநவ் ராஜ், பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினார். இவருக்கு நடத்துனர் சீனிவாஸ், ஐந்து ரூபாய் சில்லறை கொடுக்க வேண்டியிருந்தது.இதைக் கேட்டதால், நடத்துனருக்கு கோபம் வந்தது. இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அபிநவ் ராஜை வாய்க்கு வந்தபடி திட்டினார். மனம் வருந்திய பயணி, நடந்த சம்பவத்தை விவரித்து, பி.எம்.டி.சி., உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.இதை தீவிரமாகக் கருதி அதிகாரிகள், துறை ரீதியான விசாரணை நடத்தியபோது, பயணியிடம் நடத்துனர் சீனிவாஸ் தவறாக நடந்து கொண்டது தெரிய வந்தது. எனவே அவரை பணியிடை நீக்கம் செய்து, நேற்று உத்தரவிட்டனர்.பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது: பயணியர் பாதுகாப்புக்கு, பி.எம்.டி.சி., முக்கியத்துவம் அளித்துள்ளது. பயணியருக்கு தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறோம். பி.எம்.டி.சி., பஸ்சில் பயணியிடம், அவமதிப்பாக நடந்து கொண்ட நடத்துனரை சஸ்பெண்ட் செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.