பெங்களூரு,: 'டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நீண்ட நாட்கள் சிறையில் இருந்ததால், அவர் ஒரு பைத்தியக்காரன். அவர் இன்னும் விடுதலை ஆகவில்லை. மீண்டும் சிறை செல்ல வேண்டும்,'' என கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் விமர்சனம் செய்தார்.'லோக்சபா தேர்தலில் பா.ஜ., ஜெயித்தால் மோடி பிரதமர் ஆவாரா? அடுத்த செப்டம்பரில் அவருக்கு 75 வயது ஆகும். அந்த வயதை எட்டினால் ஓய்வு கொடுத்து அனுப்புவதே பா.ஜ.,வின் வழக்கம். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி என பலரை அப்படி தான் அனுப்பினர். அதே விதியின்படி, அடுத்தாண்டு மோடிக்கு ஓய்வு கொடுப்பர். அமித் ஷா பிரதமராகி விடுவார்' என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் கூறி இருந்தார்.இதற்கு பதிலடி கொடுத்து, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், பெங்களூரில் நேற்று கூறியதாவது:'இண்டியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை. ஆனால், நரேந்திர மோடி தான் எங்கள் பிரதமர் என்று மக்களே தீர்மானித்து விட்டனர்.பா.ஜ.,வில், 75 வயது கடந்தவர்களுக்கும் தேர்தலில் சீட் வழங்கப்பட்டுள்ளது. சீட் வழங்கப்படாது என்ற விதிமுறை எங்கள் கட்சியில் இல்லை. காங்கிரசார், அவர்களாகவே விதிமுறையை உருவாக்கி உள்ளனர்.டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நீண்ட நாட்கள் சிறையில் இருந்ததால், அவருக்கு புத்தி கலங்கி விட்டது. அவர் ஒரு பைத்தியகாரன். அவர் இன்னும் விடுதலை ஆகவில்லை. மீண்டும் சிறை செல்ல வேண்டும்.அவர் தவறு செய்யவில்லை என்றால், நீதிமன்றம் ஏற்கனவே ஜாமின் வழங்கி இருக்கும். லாலுபிரசாத்தும் சிறை சென்றார். தவறு செய்தவர்கள் சிறை சென்றுள்ளனர்.சட்ட மேலவை தேர்தலில், ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்திருப்பது, கட்சியின் மேலிட முடிவு. வேட்பாளர்களை கட்சி மேலிடம் தான் தேர்வு செய்தது. இதில், மாநில தலைவர்களின் முடிவு எதுவும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.