உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூடா முறைகேட்டின் சூத்திரதாரி பைரதி சுரேஷ்: விஸ்வநாத் புகார்

மூடா முறைகேட்டின் சூத்திரதாரி பைரதி சுரேஷ்: விஸ்வநாத் புகார்

பெங்களூரு: “மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் நடந்துள்ள முறைகேட்டின் சூத்திரதாரியே, நகர வளர்ச்சித்துறை அமைச்சர் பைரதி சுரேஷ்தான். இவரை ஏன் கைது செய்யவில்லை?” என பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் கேள்வி எழுப்பினார்.இதுகுறித்து, பெங்களூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:'மூடா'வில் 4,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முறைகேடு நடந்துள்ளது. இதன் சூத்திரதாரி நகர வளர்ச்சித்துறை அமைச்சர் பைரதி சுரேஷ். இவர் எப்படி வெளியே இருக்கிறார் என்பது தெரியவில்லை. இவரை ஏன் கைது செய்யவில்லை?வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் நாகேந்திரா ஏற்கனவே, கைதாகி சிறையில் இருக்கிறார். இந்த ஆணையத்தில் 189 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதனால் நாகேந்திரா, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இவரை அமலாக்கத்துறை கைது செய்தது.'மூடா' முறைகேடு குற்றச்சாட்டு எழுந்தும், பைரதி சுரேஷ் எந்த முகத்தை வைத்துக்கொண்டு, அமைச்சர் பதவியில் நீடிக்கிறார்? வால்மீகி மேம்பாட்டு ஆணையத்துக்கு ஒரு நியாயம், மூடாவுக்கு மற்றொரு நியாயமா?நாகேந்திரா சிறைக்கு சென்றுள்ளார் என்றால், ஆயிரக்கணக்கான கோடி ஊழல் செய்த பைரதி சுரேஷும் கூட, சிறைக்கு செல்ல வேண்டும்.முறைகேட்டில் தொடர்புள்ள, 'மூடா' கமிஷனர் மீது அரசு, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இவரை காப்பாற்ற, நகர வளர்ச்சித்துறை அமைச்சர் முயற்சிக்கிறார். எதிர்க்கட்சியினர் மனை பெற்றுள்ளனர். இவர்களின் ஆவணங்களை திரட்டுவதில் ஈடுபட்டுள்ளார்களா?'மூடா' முறைகேடு தொடர்பாக, முதல்வர் சித்தராமையாவுக்கு, கவர்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பொதுமக்களின் புகாரின்படி, கவர்னர் நோட்டீஸ் அளித்தது சரிதான். அதற்கு பதிலளிக்காமல் முதல்வர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.சித்தராமையாவும் வக்கீல்தான். அவருக்கு சட்டத்தை பற்றி அறிவு இல்லையா? கவர்னரின் நோட்டீசுக்கு விளக்கம் அளிப்பது, முதல்வரின் கடமை. அதற்கு மாறாக, அந்த கட்சியினர் மனை பெற்றனர், இந்த கட்சியினர் மனை பெற்றதாக கூறுவதை நிறுத்த வேண்டும்.முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, அந்த பதவிக்கான கவுரவத்தை காப்பாற்ற வேண்டும். தன் கவரவத்தை சித்தராமையா அதிகரித்துக் கொள்ள வேண்டும். மனம் போனபடி பேசுவதால், இவர் பெரியவர் ஆகிவிடமாட்டார்.கடந்த 40 ஆண்டுகள், தன் அரசியல் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளியும் இல்லை என, கூறும் சித்தராமையா இப்போது குற்றவாளி இடத்தில் நிற்கிறார் என்பதை மறக்கக் கூடாது. கவுரவத்துடன் ராஜினாமா செய்து, மரியாதையுடன் வீட்டுக்குச் செல்லுங்கள்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை