பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் நான்கு தொகுதிகளுக்கு, பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். சீட்டுக்காக காத்திருந்த சுமலதா கழற்றி விடப்பட்டுள்ளார்.கர்நாடகாவில் லோக்சபா தேர்தலை, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்து சந்திக்கிறது. பா.ஜ., வெளியிட்ட முதல் கட்ட பட்டியலில் 20 தொகுதிகளுக்கு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மாண்டியா, ஹாசன், கோலார் தொகுதிகள், கூட்டணி கட்சியான ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கப்பட்டன.இந்நிலையில் நேற்று இரவு பா.ஜ., வெளியிட்ட பட்டியலில், சித்ரதுர்கா தனி தொகுதி தவிர்த்து மற்ற நான்கு தொகுதிகளுக்கும், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.உத்தர கன்னடாவில் முன்னாள் சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி, 62, சிக்கபல்லாப்பூரில் முன்னாள் அமைச்சர் சுதாகர், 50, ராய்ச்சூரில் சிட்டிங் எம்.பி., ராஜா அமரேஸ்வர் நாயக், 66, பெலகாவியில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், 68 வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.வேட்பாளர்களின் அரசியல் அனுபவங்கள்:விஸ்வேஸ்வர் ஹெக்டேஉத்தர கன்னடாவின் ஷிர்சி தொகுதியில் இருந்து, மூன்று முறை தொடர்ந்து எம்.எல்.ஏ., ஆனவர். பள்ளிக்கல்வி அமைச்சர், சபாநாயகராக பணியாற்றிய அனுபவம் உள்ளது. ஏ.வி.பி.வி., மாணவர் அமைப்பில் வந்தவர். நேர்மையான அரசியல்வாதி என்று பெயர் பெற்றவர்.ஜெகதீஷ் ஷெட்டர்ஹூப்பள்ளி ரூரல், ஹூப்பள்ளி - தார்வாட் மத்திய தொகுதிகளில் இருந்து தொடர்ந்து, ஆறு முறை எம்.எல்.ஏ., ஆனவர். முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர் உட்பட கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். லிங்காயத் சமூகத்தின் பிரபல தலைவராக உள்ளார்.சுதாகர்சிக்கபல்லாப்பூர் தொகுதியில் இருந்து, காங்கிரஸ் சார்பில் 2013, 2018ல் எம்.எல்.ஏ., ஆனவர். 2019ல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.,வில் இணைந்தார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சுகாதாரத்துறை அமைச்சர் ஆனார். ஆனால், கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தார். பழைய மைசூரில் ஓட்டு வங்கியாக உள்ள, ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர்.ராஜா அமரேஸ்வர் நாயக்கடந்த லோக்சபா தேர்தலில், ராய்ச்சூர் தனி தொகுதியில் இருந்து, முதல்முறை எம்.பி., ஆனவர். இம்முறை அவருக்கு சீட் கொடுக்க, கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் கட்சி மேலிடம், இன்னொரு வாய்ப்பு கொடுத்து உள்ளது.நாராயணசாமிசித்ரதுர்கா தனி தொகுதி எம்.பி.,யாக இருக்கும் நாராயணசாமி, மத்திய இணை அமைச்சராக உள்ளார். தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று அவர் கூறியதால், புதிய வேட்பாளரை மேலிடம் தேடுகிறது. இதனால், சித்ரதுர்கா வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஆகிறது.உத்தர கன்னடா தொகுதியில் ஆறு முறை எம்.பி.,யாக இருந்த அனந்த்குமார் ஹெக்டேவுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.சர்ச்சைக்குரிய வகையில் பேசும் அவர், 'அரசியலமைப்பு சட்டத்தை மாற்றவே, பா.ஜ., ஆட்சிக்கு வந்துள்ளது' என்று கூறினார்.இதனால் மத்திய அமைச்சர் பதவியை இழந்தார். தற்போது சீட்டும் மறுக்கப்பட்டுஉள்ளது.சுமலதாவுக்கு 'நோ'மாண்டியா சுயேச்சை எம்.பி., சுமலதா, பா.ஜ.,வில் சீட் எதிர்பார்த்தார். ஆனால் பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருக்கும், ம.ஜ.த.,வுக்கு மாண்டியா ஒதுக்கப்பட்டது. இதனால் வேறு தொகுதியில் போட்டியிட சுமலதாவுக்கு, பா.ஜ., மேலிடம், 'ஆபர்' கொடுத்தது. அதை ஏற்க மறுத்தார்.தற்போது அறிவிக்கப்பட்ட பட்டியலில் அவர் பெயர் இல்லாததால், சுமலதாவை, பா.ஜ., கழற்றி விட்டுள்ளது. இதனால், 2019 தேர்தல் போல, சுயேச்சையாக போட்டியிடுவாரா அல்லது ம.ஜ.த.,வுக்கு ஆதரவு அளிப்பாராஎன்பதற்கு கூடிய விரைவில் விடை கிடைத்து விடும்.