உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடைசி நேர பட்டுவாடாவில் குளறுபடி தொண்டர்களை சமாதானப்படுத்திய வேட்பாளர்கள்

கடைசி நேர பட்டுவாடாவில் குளறுபடி தொண்டர்களை சமாதானப்படுத்திய வேட்பாளர்கள்

பெங்களூரு: தேர்தல் பணியாற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் தங்களுக்கு சேர வேண்டிய, கவர்கள், சரியாக பட்டுவாடா செய்யவில்லை என்பதால் கடும் அதிருப்தியில் உள்ளனர்கள். அவர்களை வேட்பாளர்கள் சமாதானப்படுத்தினர்.கர்நாடகாவில் முதல் கட்டமாக, இன்று 14 தொகுதிகளில் நடக்கும் லோக்சபா தேர்தலில் பண புழக்கம் அதிகமாக இருக்கும் என்று அரசியல் கட்சியினர் காத்திருந்தனர். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பிரசாரம் முடிந்ததும், கட்சியினருக்கு பட்டுவாடா ஜோராக நடந்தது.கடந்த சட்டசபை தேர்தலின் போது, 'பூத்' கமிட்டி உறுப்பினர்களுக்கு ஒரு தொகையும், பிரமுகர்களுக்கு ஒரு தொகையும், முக்கிய பிரமுகர்களுக்கு ஒரு தொகையும், பிரித்து வழங்கப்பட்டது. இது தவிர, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய தினம் இரவும், ஓட்டுப்பதிவு நாளன்றும் ஓட்டுச்சாவடி அருகில் நின்று சிலர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த சம்பவங்கள் நடந்தன.தேர்தல் முறைகேட்டை தடுக்கும் வகையில், தேர்தல் கமிஷன் கழுகு பார்வையுடன் கண்காணிப்பில் ஈடுபட்டது. ஆனால், அவர்கள் கண்களில் மண்ணை துாவி, தங்கள் காரியத்தை முடித்தனர். சட்டசபை தேர்தலில் வழங்கியது போன்று இல்லாமல், அதில் பாதியை மட்டுமே லோக்சபா தேர்தலில் வழங்கியதாக அரசியல் கட்சி தொண்டர்கள் பேசி கொள்கின்றனர்.ஏற்கனவே வழங்கியது தவிர, நேற்று மீண்டும் பூத் கமிட்டி பிரமுகர்களுக்கு கவர்கள் சென்றுள்ளன. மேலும், ஒரு குறிப்பிட்ட தேசிய கட்சி மட்டும், நகர பகுதிகளில் உள்ள குடிசை வாழ் பகுதி வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய, கவர்கள் வழங்கியுள்ளன. 'இன்று காலை பொழுது விடிவதற்குள் வழங்கி விட வேண்டும்' என்பது வேட்பாளர்களின் கட்டளை.அதே நேரம், சட்டசபை தேர்தல் போன்று அதிக அளவில் கவர்கள் வழங்கப்படவில்லை என்று தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். சில இடங்களில் தங்கள் கட்சி பிரமுகர்களிடம் வாக்குவாதம் செய்துள்ள தகவலும் வெளியாகி உள்ளது. சில பகுதிகளில், பூத் கமிட்டி தலைவர், துணை தலைவர் மட்டும் குறிப்பிட்ட தொகையை பகிர்ந்து கொண்டுள்ளனர்.கமிட்டியின் மற்ற உறுப்பினர்களுக்கு குறைந்த தொகை மட்டுமே வழங்கியதால், அவர்களுக்குள் பூசல் எழுந்துள்ளது. சிலர், 'நாங்கள் பணியாற்ற மாட்டோம்' என்று திட்டவட்டமாக சொல்லி உள்ளனர். இதை அறிந்த வேட்பாளர் தரப்பினர், அதிருப்தியாளர்களை அழைத்து தனியாக, 'கவனித்து' அனுப்பி உள்ளனர் என்று கூறப்படுகிறது.இவர்கள் இன்று தேர்தல் பணி செய்வதை பொறுத்து, அவர்கள் திருப்திகரமாக உள்ளனரா, இல்லையா என்பது தெளிவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை