திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு பஸ் டிரைவரிடம் தகராறு செய்த விவகாரத்தில், திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், அவரது கணவரும், எம்.எல்.ஏ.,வுமான சச்சின் தேவ் உட்பட ஐந்து பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சூருக்கு அம்மாநில போக்குவரத்து கழக பஸ் சென்றது.அந்த பஸ்சிற்கு பின், திருவனந்தபுரம் மேயரும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்தவருமான ஆர்யா ராஜேந்திரன் கார் சென்றது.புகார்
மேயரின் காருக்கு வழிவிடாமல், டிரைவர் யாது, பஸ்சை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், வளைந்து வளைந்து செல்லும் வகையில், அவர் பஸ்சை இயக்கியதாகவும் சொல்லப்படுகிறது. பாளையம் சந்திப்பில், பஸ்சை முந்திய ஆர்யா ராஜேந்திரன் கார், அதை வழிமறித்து நின்றது. இது குறித்து டிரைவர் ஆர்யா ராஜேந்திரனும், அவரது கணவரும், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,வுமான சச்சின் தேவ் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பிய போது, அவர் சரியாக பதிலளிக்காமல், தகாத வார்த்தைகள் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து மேயர் அளித்த புகாரின் அடிப்படையில், பஸ் டிரைவர் யாது கைது செய்யப்பட்டு, சில தினங்களுக்கு முன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். விசாரணை
இந்நிலையில், பணி செய்ய விடாமல் தடுத்து, பொது இடத்தில் மரியாதை குறைவாக பேசியதாக கூறி மேயர் ஆர்யா, அவரது கணவர் சச்சின் தேவ் உள்ளிட்டோர் மீது டிரைவர் யாது நேற்று போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து, மேயர், அவரது கணவர் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.