| ADDED : மே 02, 2024 06:37 AM
கார்வார்: ''லோக்சபா தேர்தலில் தேசியவாதத்துக்கும் ஊழலுக்கும் இடையே மோதல் நடக்கிறது,'' என, உத்தர கன்னடா பா.ஜ., வேட்பாளர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி தெரிவித்தார்.கார்வாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் பிரதமர் நரேந்திர மோடி. அவர் மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது உறுதி. எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே தொகுதியை வளர்ச்சி அடைய செய்துள்ளார். இன்னும் விரிவான வளர்ச்சி அடைய, என்னை எம்.பி., ஆக்கும்படி, மக்களிடம் கேட்கிறேன். எனது வெற்றிக்காக தொண்டர்கள் கடுமையாக உழைக்கின்றனர். உத்தர கன்னடா பா.ஜ., கோட்டை என்பதால், வெற்றி பெறுவேன் என்பதில் உறுதியாக உள்ளேன்.ஆறு முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றாலும் லோக்சபா தேர்தலில் முதல் முறை போட்டியிடுவது புது அனுபவமாக உள்ளது. இந்த தேர்தல் தேசியவாதம் 'வெர்சஸ்' ஊழலுக்கு இடையில் நடக்கிறது. இதில் நாங்கள் வெற்றி பெறுவோம். பா.ஜ., ஒழுக்கமான கட்சி.கட்சிக்காகவும், நாட்டிற்காகவும் அயராது உழைக்கும் தொண்டர்கள் எங்களிடம் உள்ளனர். சுற்றுலா, மீன்பிடி தொழில், விவசாயம் இவை தான், எனது தொகுதியின் உயிர்நாடி. அவை மூன்றும் வளர்ச்சி அடைந்தால், மக்கள் வாழ்க்கை தரம் உயரும்.உத்தர கன்னடாவில் பன்நோக்கு மருத்துவமனை கட்ட வேண்டும். இதை எல்லாம் நடைமுறைப்படுத்த போட்டியிடுகிறேன். எம்.பி., அனந்த்குமார் ஹெக்டே சங்பரிவார் பின்னணியில் இருந்து, அரசியலுக்கு வந்தவர். என்னை ஆதரிப்பார் என்று நம்பிக்கை உள்ளது. அவர் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன்.யல்லாபுரா எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பாரின் செயல்பாடுகளை, அவரது தொகுதி மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவர்.இவ்வாறு அவர் கூறினார்.