| ADDED : ஆக 20, 2024 11:27 PM
எலக்ட்ரானிக் சிட்டி : ''பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டிக்கு, தேவராஜ் அர்ஸ் எலக்ட்ரானிக் சிட்டி என்று பெயர் சூட்டப்படும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், பெங்களூரு விதான் சவுதா மாநாட்டு அரங்கில், முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்சின் 109வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.விழாவில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:சமூகத்தில், தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்ற மனப்பான்மை இருக்க கூடாது. ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு பார்க்க கூடாது.ஜாதி நடைமுறை இருக்க கூடாது. அனைவரும் மனிதர்களாக மட்டுமே வாழ வேண்டும் என்பது பசவண்ணரின் கனவு.இதன் அடிப்படையில் தான், அம்பேத்கர், அரசியல் அமைப்பை உருவாக்கினார். முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்சும் அதே கொள்கையை பின்பற்றினார். அதேபோன்று ஆட்சி செய்து, பல புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்தார்.மன்னர் வம்சத்தில் பிறந்தாலும், ஒடுக்கப்பட்டோர், தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மகளிர் நலனுக்காக உழைத்தவர். நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து, 77 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சம உரிமை கிடைக்கவில்லை. ஜாதி அடிப்படையில் தான் அடையாளம் காணப்படுகின்றனர்.மரணத்துக்கு பிந்தைய பாரத் ரத்னா விருதை, தேவராஜ் அர்சுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சிபாரிசு செய்யப்படும். அவரது நினைவை போற்றும் வகையில், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டிக்கு, தேவராஜ் அர்ஸ் எலக்ட்ரானிக் சிட்டி என்று பெயர் சூட்டப்படும். இதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.