கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், மாநில அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. கொடூரக்கொலை
மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி., கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த இளம்பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கும் என்பதால், போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். முழு அடைப்பு
இந்த படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்துக்கு அழைப்ப விடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 12 மணிநேர முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல்
இதனிடையே, கடந்த 14ம் தேதி இரவு, கொலை செய்யப்பட்ட இளம் டாக்டர் பணிபுரிந்து வந்த ஆர்.ஜி., கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல், அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். சமூக வலைதளங்களின் மூலம் கூட்டத்தை திரட்டி இந்த தாக்குதல் சம்பவம் நடத்தியிருப்பது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதிருப்தி
இந்த நிலையில், அரசு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு கோல்கட்டா ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை பார்க்கும் போது மாநில அரசு நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளதாகவும், மாநகர போலீசாரால் பாதுகாப்பு கொடுக்க முடியாமல் போனால், டாக்டர்கள் எப்படி அச்சமில்லாமல் பணியை செய்வார்கள் என்று நீதிபதிகள் கேட்டனர். மருத்துவமனையை மூடிவிட்டு, நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற உத்தரவிட்ட ஐகோர்ட், ஏதேதோ காரணங்களுக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் மாநில அரசு, சம்பவம் நடந்த மருத்துவமனையைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினர். பொறுப்பு
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், டாக்டர்கள் எந்த பயமும் இன்றி பணியாற்றும் சூழலை உருவாக்கிக் கொடுப்பது மாநில அரசின் கடமை, என நீதிபதிகள் கூறியுள்ளனர்.