உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூகுள் மேப்பால் கால்வாயில் விழுந்த கார் அதிர்ஷ்டவசமாக தப்பிய நான்கு பயணியர்

கூகுள் மேப்பால் கால்வாயில் விழுந்த கார் அதிர்ஷ்டவசமாக தப்பிய நான்கு பயணியர்

கோட்டயம், கேரளாவில், நேராக சென்று இடது புறம் திரும்பவும் என்று, 'கூகுள் மேப்' கூறியதை நம்பி, காரில் சென்றவர்கள், அங்கிருந்த கால்வாயில் விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த நான்கு பயணியரும் உயிர் தப்பினர்.தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண், காரில், கேரளாவுக்கு பயணம் சென்றனர். ஆலப்புழாவுக்கு செல்லும் வழியில், கோட்டயம் அருகே கருப்பந்தாராவில் உள்ள கால்வாயில் அவர்களுடைய கார் விழுந்தது. உள்ளூர் மக்கள் உதவியுடன், தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று அதிகாலையில் நடந்துள்ளது. அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. காரை ஓட்டிச் சென்றவர், கூகுள் மேப் வழிகாட்டியபடி காரை செலுத்தியிருந்தார். நேராகச் சென்று இடதுபுறம் திரும்பவும் என்று கூகுள் மேப் கூறியுள்ளது. மழை பெய்து கொண்டிருந்ததால், மெதுவாகவே கார் சென்றது.இடது பக்கம் திருப்ப நினைத்தபோது, அங்கு தண்ணீர் இருந்தது. 'மழை பெய்ததால், சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. கூகுள் மேப் தப்பாக சொல்லாது' என்று நம்பி, அவர், காரை இடது பக்கம் திருப்பியுள்ளார்.அப்போது காரின் முன்பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் துவங்கியபோதுதான், அது ஒரு கால்வாய் என்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.இதற்கிடையே, கார் ஜன்னல் வழியாக தப்பிய ஒருவர், வெளியே வந்து உள்ளூர் மக்களை உதவிக்கு அழைத்துள்ளார். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, காரில் இருந்த நான்கு பேரையும் மீட்டனர். விடிந்ததும், கிரேன் வாயிலாக காரும் வெளியே எடுக்கப்பட்டது.அந்தப் பகுதியில், கால்வாய் கரையை ஒட்டி, இரும்பு தடுப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், மழை காரணமாக அது தெரியாததால், இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.இதற்கான அறிவிப்பு பலகை இல்லாததே விபத்துக்கு காரணம் என்று உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர். இதுபோல, இங்கு பல விபத்துகள் முன்பு நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பயன்படுத்துவது எப்படி?

கூகுள் மேப் என்பது தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதே நேரத்தில், இதை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து நிபுணர்களின் ஆலோசனை: பயணம் துவக்குவதற்கு முன், கூகுள் மேப் காட்டும் வழித்தடம் குறித்து ஆய்வு செய்யுங்கள். நாம் செல்லும் இடத்துக்கு மாற்றுப்பாதை உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும் பயணம் துவங்குவதற்கு முன், மொபைலில் இன்டர்நெட் வசதி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கூகுள் மேப் செயலியை அடிக்கடி 'அப்டேட்' செய்து கொள்ளுங்கள். தானாகவே புதிய தகவல்களை அளிக்கும் வசதியை பயன்படுத்தி கொள்ளுங்கள் மேப்பை பார்த்து ஓட்டுவதைவிட, ஒலி வடிவில் அது வழிகாட்டும் வசதியை பயன்படுத்துவது சிறப்பானது. இதனால், கவனச் சிதறலை தவிர்க்கலாம் பயணத்தின்போது, நம் பொது அறிவையும் பயன்படுத்தி கொள்வது சிறப்பாக இருக்கும். ஆங்காங்கே வழியில் உள்ளவர்களிடம், நாம் பயணிக்கும் வழி சரியானதா என்பதை உறுதிபடுத்தி கொள்ளலாம். மழை, இரவு நேரங்களில் இன்னும் எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம் பயணத்துக்கு முன், நம் லொகேஷனை நமக்கு நம்பகமான உறவினர் அல்லது நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்வது நல்லது. அவர்கள் நம்மை கண்காணித்து, நாம் செல்லும் பாதையில் ஏதாவது மாற்றம் இருந்தால் நமக்கு தெரிவிக்க வசதியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ