டில்லி விமான நிலையத்தில் அதிவிரைவு இமிகிரேஷன் சேவை; நாட்டில் முதன்முறையாக அறிமுகம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : நாட்டிலேயே முதல் முறையாக டில்லி விமான நிலையத்தில், 'இமிகிரேஷன்' எனப்படும், குடியேற்ற சேவையை அதிவிரைவாக கையாளும் நடைமுறையை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று துவக்கி வைத்தார். வெளிநாடு செல்லும் பயணியர், அங்கிருந்து வருபவர்கள் தங்களின், 'இமிகிரேஷன்' எனப்படும் குடியேற்றம் தொடர்பான நடைமுறைக்காக விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை தற்போது உள்ளது. வளர்ந்த இந்தியா
இதை தவிர்க்கும் விதமாக, இந்த சேவையை எளிதாக்கும் வகையில் 'பாஸ்ட் ட்ராக் இமிகிரேஷன் - டிரஸ்டட் டிராவலர் புரோக்ராம்' எனப்படும் நம்பகமான பயணியருக்கான விரைவான குடியேற்ற சேவை திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. விமான நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள பிரத்யேக எலக்ட்ரானிக் வாசல் வழியாக செல்லும் பயணியருக்கு, குடியேற்ற சேவைகள் விரைவாக செயல்படுத்தும் வசதியை நாட்டிலேயே முதன்முறையாக டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள மூன்றாவது முனையத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: 'வரும் 2047க்குள் வளர்ந்த இந்தியா' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது. மத்திய அரசின் தொலைநோக்கு முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திட்டம், நாட்டில் உள்ள 21 விமான நிலையங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டில்லியைத் தொடர்ந்து, மும்பை, சென்னை, கோல்கட்டா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி மற்றும் ஆமதாபாத் ஆகிய ஏழு முக்கிய விமான நிலையங்களில் இது செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த திட்டம் குறித்து, மத்திய அரசின் குடியேற்ற பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது: 'பாஸ்ட் ட்ராக் இமிகிரேஷன்' திட்டம் முதற்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வரும் இந்திய பயணியர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, சர்வதேச பயணியர் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற பயணியர் முதலில் மத்திய அரசின் www.ftittp.mha.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டியது அவசியம். நேர்காணல்
விண்ணப்பத்தில் குறிப்பிட்ட விபரங்களை வழங்கிய பின், கைரேகை மற்றும் முகப் படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இது குடியேற்ற பணியகத்தால் சரிபார்க்கப்பட்டு, பயணியரின் நேர்காணலுக்கு நேரம் ஒதுக்கப்படும். இந்த திட்டத்தில் பதிவு செய்ய கட்டணம் எதுவும் இல்லை. இந்த திட்டம் தொடர்பான உதவியை பயணியர் பெறுவதற்கு வசதியாக, india.ftittp-mha.gov.in. என்ற இ - மெயில் முகவரி மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.