சாம்ராஜ்பேட் : மொபைல் போனில் வீடியோ எடுத்தபடி, மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு கணவர் தப்பினார்.பெங்களூரின் சித்தாபுராவைச் சேர்ந்தவர் தபரேஜ் பாஷா, 38. இவரது மனைவி பாஜில் பாத்திமா, 34. இவர்களுக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக, அடிக்கடி சண்டை போட்டனர்.மனம் வெறுத்த மனைவி, சில மாதங்களுக்கு முன், தன் இரண்டு குழந்தைகளுடன், சாம்ராஜ்பேட்டின், எம்.டி., பிளாக்கில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இங்கிருந்தே குழந்தைகள் பள்ளிக்கு சென்று வந்தனர்.அவ்வப்போது மாமியார் வீட்டுக்கு சென்று, மனைவியை தன் வீட்டுக்கு வரும்படி மன்றாடினார். மனைவி வர மறுத்தார். இதனால் மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.சில நாட்களுக்கு முன், சாலையில் நடந்து சென்ற மனைவியை வழிமறித்து, தன்னுடன் வரும்படி கட்டாயப்படுத்தினார். அவர் மறுத்ததால் கொலை செய்வதாக மிரட்டினார். இதனால் பயந்த பாஜில் பாத்திமா, தன் வீட்டில் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தினார்.நேற்று காலை 8:30 மணியளவில், தபரேஜ் பாஷா, தன் மாமியார் வீட்டுக்குச் சென்றார். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் வரை காத்திருந்தார். அவர்கள் பள்ளிக்குச் சென்றதும், மனைவியுடன் தகராறு செய்து, மொபைல் போனில் வீடியோ எடுத்தபடி, கத்தியால் அவரை சரமாரியாக குத்திக்கொலை செய்துவிட்டு, பைக்கில் தப்பினார்.சம்பவம் நடந்தபோது, பாஜில் பாத்திமாவின் தாய், வீட்டில் இருந்தார். மாற்றுத் திறனாளி என்பதால், மகளை அவரால் காப்பாற்ற முடியவில்லை. தகவல் அறிந்து சாம்ராஜ்பேட் போலீசார், அங்கு வந்து பாஜில் பாத்திமாவின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினர்.வழக்குப் பதிவு செய்து, தபரேஜை தேடி வருகின்றனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், இவர் வீடியோ எடுத்தபடி கொலை செய்தது பதிவாகி உள்ளது.