புதுடில்லி : நம் நாட்டில் நிலவும் காற்று மாசு குறித்து, அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்குழு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. நம் நாட்டைச் சேர்ந்த குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.சென்னை, ஆமதாபாத், பெங்களூரு, டில்லி, ஹைதராபாத், கோல்கட்டா, மும்பை, புனே, சிம்லா, வாரணாசி உள்ளிட்ட 10 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த 10 நகரங்களில், 2008 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் ஆண்டுதோறும் ஏற்பட்ட உயிரிழப்புகளில்சராசரியாக 33,000 மரணங்கள், காற்று மாசால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.உலக சுகாதார நிறுவனங்களின் பரிந்துரையின்படி, புற்றுநோய் ஏற்பட காரணமான பிஎம் 2.5 என்ற நுண் துகள்கள், காற்றில் ஒரு கியூபிக் மீட்டருக்கு 15 மைக்ரோகிராம் என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டில் 60 மைக்ரோகிராமுக்கும் அதிகமாக உள்ளது. குறிப்பாக, டில்லியில் ஆண்டுதோறும் ஏற்படும் உயிரிழப்புகளில் 11.5 சதவீதம் அதாவது 12,000 மரணங்கள் காற்று மாசால் ஏற்படுகின்றன.அதிக காற்று மாசு இல்லாத நகரங்களாக அறியப்படும் மும்பை, கோல்கட்டா, சென்னையிலும் உயிரிழப்பு விகிதங்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.இதன் காரணமாக, சென்னை உட்பட நாட்டின் மிகப் பெரிய 10 நகரங்களில் ஏற்படும் உயிரிழப்புகளில் 11.5 சதவீத மரணங்கள் காற்று மாசால் ஏற்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.எனவே, காற்று மாசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளில் இந்தியா உடனடி கவனம் செலுத்த வேண்டும் என, ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.