| ADDED : ஆக 20, 2024 11:37 PM
கலபுரகி : சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த போது, மருத்துவ மாணவி முன்பு அநாகரிகமாக நடந்து கொண்ட வாலிபரை போலீஸ் தேடுகிறது. கலபுரகி டவுனில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை உள்ளது. இங்கு மருத்துவம் படிக்கும் 23 வயது மாணவி, பயிற்சியில் உள்ளார். நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு 25 வயது வாலிபர் ஒருவர் வந்தார். காலில் காயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவ மாணவியிடம் கூறினார். அவருக்கு மாணவி சிகிச்சை அளிக்க முயன்றார்.அப்போது மாணவி முன்பு வாலிபர் அநாகரிகமாக நடந்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டதால், வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். பின், மாணவி வீட்டிற்கு சென்ற போது அவரை பின்தொடர்ந்து வாலிபர் சென்றுள்ளார். இதுபற்றி கலபுரகி பல்கலைக்கழக போலீசில் மாணவி புகார் செய்தார். வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை போலீசார் தேடுகின்றனர்.