| ADDED : ஆக 01, 2024 11:03 PM
பெங்களூரு: ''எஸ்.சி., பிரிவினரில், மிகவும் பின் தங்கியவர்களை அடையாளம் கண்டு, உள் இட ஒதுக்கீடு அளிக்கும் மாநில அரசுகளின் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது வரவேற்கத்தக்கது,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:எஸ்.சி., பிரிவினரில், மிகவும் பின் தங்கியவர்களை அடையாளம் கண்டு, உள் இட ஒதுக்கீடு அளிக்கும், மாநில அரசுகளின் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால், உள் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் இருந்த முட்டுக்கட்டை நீங்கியது. சட்ட வல்லுனர்கள், எஸ்.சி., சமுதாய தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.எஸ்.சி., பிரிவுக்குள் உள்ள உட்பிரிவினருக்கு, உள் இட ஒதுக்கீடு அளிக்க அரசு தயாராக உள்ளது. இதற்கு முன் காங்கிரஸ் அரசு இருந்த போது, சதாசிவா தலைமையிலான ஆணைய அறிக்கையை செயல்படுத்துவது குறித்து, சட்டசபை தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்திருந்தோம். இதை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது.கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், அன்றைய பா.ஜ., அரசு அவசரத்தில் முடிவு செய்து, உள் இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசுக்கு, அனுப்பி வைத்தது. இதுவரை மத்திய அரசு முடிவு செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.