உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காவேரி திரையரங்கு மூடல் சினிமா ரசிகர்கள் வருத்தம்

காவேரி திரையரங்கு மூடல் சினிமா ரசிகர்கள் வருத்தம்

பெங்களூரு: பெங்களூரில் பிரசித்தி பெற்ற, 'காவேரி' திரையரங்கு நிரந்தரமாக மூடப்படுகிறது. இது சினி ரசிகர்களுக்கு வருத்தம் அளித்துள்ளது.பெங்களூரின் பேலஸ் குட்டஹள்ளி சாலையில், காவேரி திரையரங்கம் 1974ன் ஜனவரி 11ல் திறக்கப்பட்டது. நடிகர் ராஜ்குமார் நடித்த பங்காரத மனுஷ்யா திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரையரங்கில் திரைக்கு வந்த முதல் படம் இதுவே.

அதிக இருக்கைகள்

பெங்களூரில், 'கபாலி' திரையரங்குக்கு பின், அதிக இருக்கைகள் கொண்ட திரையரங்கம் என்ற பெருமை, காவேரிக்கு இருந்தது. இந்த திரையரங்கம் திறக்கப்பட்ட போது, 1,384 இருக்கைகள் இருந்தன. 1995ல் கட்டடத்தை மாற்றி கட்டிய பின், இருக்கைகள் எண்ணிக்கை 1,100 ஆக குறைந்தது.இங்கு ஹிந்தி படங்கள் அதிகமாக திரையிடப்பட்டன. சங்கராபரணம் - 40 வாரம், ஹிந்தியின் தில்வாலே துனியா லேஜாயேங்கே - 22 வாரம் ஓடின. இந்தியன் திரைப்படம் 100 நாட்களை தாண்டி ஓடியது.'ஓடிடி' வந்த பின், மக்கள்திரையரங்குகளுக்கு வருவது குறைந்தது. சிங்கிள் ஸ்க்ரீன் திரையரங்குகளை மூடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் விளைவாக பெங்களூரின் ஒவ்வொரு திரையரங்காக மூடப்படுகிறது. பல்லவி, கபாலி, லட்சுமி, ஸ்ரீ, அஜந்தா உட்பட பல திரையரங்குகள் வரலாற்று பக்கத்தில் சேர்ந்து விட்டன. இப்போது காவேரியும், அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.

50வது ஆண்டு விழா

சமீபத்தில் 50வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 19ல் திரையரங்கில் இறுதி காட்சி திரையிடப்பட்டது. மைதான், படேமியா சோடேமியா ஆகிய படங்கள் கடைசியாக திரையிடப்பட்ட ஹிந்தி படங்களாகும். இந்த திரையரங்கை இடித்து விட்டு, ஷாப்பிங் மால் கட்ட உரிமையாளர் திட்டமிட்டுள்ளார்.திரையரங்கு உரிமையாளர் பிரகாஷ் நரசிம்மையா கூறியதாவது:ஓடிடி வந்த பின், திரையரங்குகள் பெரும் நஷ்டமடைந்தன. மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஓடிடி பெரும் பிரச்னையாக உள்ளது. எங்களால் எதையும் செய்ய முடியவில்லை. திரையரங்கை மூடுவது, எங்களுக்கும் வருத்தம் அளித்துள்ளது.காலத்துக்கு தகுந்தபடி, மாறுவது கட்டாயம். வருவாய் இல்லாமல் என்ன செய்ய முடியும். படம் திரையிட்டு மக்கள் வராவிட்டால், மின் கட்டண பில் கூட கட்ட முடியாது. எனவே திரையரங்கை இடித்து விட்டு, ஷாப்பிங் மால் கட்ட முடிவு செய்துள்ளோம்.ஹீரோக்கள் ஆண்டுக்கு மூன்று, நான்கு படங்கள் நடித்தால், திரையரங்குகள் லாபகரமாக செயல்படும். ஆனால் அவர்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் நடித்தால் எப்படி. திரையரங்குகளை காலியாக வைத்திருக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை