புதுடில்லி:டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் நீட்டிப்பு மனு மீதான தீர்ப்பு வரும் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மதுபானக் கொள்கையை ரத்து செய்த துணைநிலை கவர்னர் சக்சேனா, இதுகுறித்து சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டார். வழக்குப் பதிவு
விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை கைது செய்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறையும் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை கைது செய்தது. மேலும், இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து 10 முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தனக்கு சம்மன் அனுப்பி இருப்பது சட்டவிரோதம் என அமலாக்கத் துறைக்கு பதில் அனுப்பினார்.இந்நிலையில், கடந்த மார்ச் 21ம் தேதி மாலை கெஜ்ரிவால் -பங்களாவில் அதிரடி சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அன்று இரவே அவரைக் கைது செய்தனர்.விசாரணைக்குப் பின், டில்லி திஹார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்கும் ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்திலும், டில்லி உயர் நீதிமன்றத்திலும் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி மே 10ம் தேதி உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால ஜாமின் நேற்றுடன் முடிவடைந்தது. மருத்துவப் பரிசோதனை
இதற்கிடையில், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், இடைக்கால ஜாமினை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க வேண்டும் எனக்கோரி, கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள், விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.இதையடுத்து, விசாரணை நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஜாமின் நீட்டிப்பு மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா, மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது; உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமினை நீட்டிப்பதற்கான மனு அல்ல எனக்கூறி தீர்ப்பை ஒத்திவைத்தார்.அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:இடைக்கால ஜாமின் முடிந்தவுடன் சிறையில் சரண் அடைவதாக பத்திரிகையாளர்களுக்கு நேற்று முன் தினம் பேட்டியில் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இடைக்கால ஜாமின் காலத்தில் தேர்தல் பிரசாரம் செய்துஉள்ளார். ஆனால் இப்போது, திடீரென உடல்நிலை சரியில்லை என்கிறார். தன் உடல்நிலை குறித்து தவறான அறிக்கைகளை வெளியிடுகிறார். அவர் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யலாம். உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமினை நீட்டிக்கக் கோரி விசாரணை நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்ய இடமில்லை. மருத்துவ பரிசோதனைகளை தாமதப்படுத்தி நீதிமன்றத்தை ஏமாற்ற கெஜ்ரிவால் திட்டமிடுகிறார். ஏதேனும் மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்பட்டால், சிறையில் அனைத்து வசதிகளும் உள்ளது. தேவைப்பட்டால் எய்ம்ஸ் அல்லது வேறு எந்த மருத்துவமனையிலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும்.இவ்வாறு அவர் வாதாடினார்.இந்த வழக்கில் வரும் 5ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக குறிப்பிட்டு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.