| ADDED : மே 08, 2024 01:17 AM
நாகர்கோவில்:ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் திருவனந்தபுரம் பெண் மேயர் மற்றும் அவரது கணவர் சச்சின் தேவ் எம்.எல்.ஏ. தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.திருவனந்தபுரம் மேயரான மார்க்சிஸ்ட கட்சியின் ஆர்யா ராஜேந்திரன், கணவர் சச்சின் தேவ் எம்.எல்.ஏ., உறவினர் உட்பட ஐந்து பேர் பயணம் செய்த காருக்கு வழிவிட மறுத்ததாக கூறி கேரள அரசு பஸ் டிரைவர் யதுவிடம் தகராறில் ஈடுபட்டனர்.இதற்கிடையில் பஸ் டிரைவர் மீது ஆர்யா ராஜேந்திரன் தந்த புகாரில் திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.யது புகாரில் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து வழக்கறிஞர் பைஜூ நோயல், திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் மேயர் மற்றும் எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஆர்யா ராஜேந்திரன், சச்சின் தேவ் உட்பட ஐந்து பேர் மீதும் திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசார் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். எம்.எல்.ஏ., சச்சின் தேவ் பஸ்ஸில் அத்துமீறி ஏறினார், கண்காணிப்பு கேமரா மெமரி கார்டை தங்களது செல்வாக்கை பயன்படுத்தி மேயரும் எம்.எல்.ஏ.,வும் அழித்துவிட்டனர் என்று எப். ஐ .ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முக்கிய எதிர்க் கட்சிகளான காங்., மற்றும் பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளன.