ஹாசன் : கால் வலிக்கு சிகிச்சை பெற வந்த முதியவரிடம், மெஹந்தி கோன் வாங்கி வரும்படி மருந்து சீட்டில், நர்ஸ் எழுதி கொடுத்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கால் வலியால் அவதிப்பட்ட ஈரய்யா, 65, என்பவர், இரண்டு நாட்களுக்கு முன் சிகிச்சைக்காக, ஹாசன் மாவட்ட மருத்துவமனைக்கு வந்தார். இவரை பரிசோதித்த நர்ஸ், இரண்டு கிரெப் பேண்டேஜ் மற்றும் ஒரு மெஹந்தி கோன் வாங்கி வரும்படி, மருந்து சீட்டில் எழுதி கொடுத்தார்.முதியவரும் மருந்து கடையில், சீட்டை காண்பித்த போது, 'சீட்டில் எழுதியிருப்பது மருந்து அல்ல, மெஹந்தி கோன். இதை ஏன் எழுதி கொடுத்தனர்' என கடைக்காரர் கேள்வி எழுப்பினார். முதியவர் பல மருந்து கடைகளுக்கு சென்று, சீட்டை காண்பித்த போது, இதே கேள்வியை கேட்டனர். முதியவர் கடை கடையாக அலைந்தார்.இதை கண்ட சமூக சேவகி சுனிதா ஹெப்பார், மருந்து சீட்டை வாங்கி பார்த்து ஆச்சர்யம் அடைந்தார். 'நர்சிடமே கேளுங்கள்' என, முதியவரை அனுப்பினார். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக, ஹாசன் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சந்தோஷ் கூறியதாவது:முதியவர் ஈரய்யா கால் வலியால் அவதிப்பட்டு, சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு ரத்த நாளங்களில் பிரச்னை இருந்தது. அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.காலில் பாதிப்புள்ள இடத்தை, அடையாளம் காண பேனாவால் குறியிட்டால், இரண்டு நாட்களில் அழிந்து விடும். எனவே, மெஹந்தி கோன் மூலமாக குறியிடப்படுகிறது. எனவே, மெஹந்தி கோன் வாங்கி வரும்படி, முதியவரிடம் நர்ஸ் மருந்து சீட்டில் எழுதி கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.