| ADDED : ஜூன் 13, 2024 04:44 PM
மாண்டியா : பாலுக்கு ஊக்கத்தொகை வழங்காத காங்கிரஸ் அரசின் மீது, மாண்டியா விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கர்நாடகாவில் பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், ஒரு லிட்டருக்கு ஐந்து ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று, காங்கிரஸ் அரசு அறிவித்தது. அதன்படி பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. மாண்டியாவில் மட்டும் 98,000 விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கிடைத்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை, மாண்டியா விவசாயிகளுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கவில்லை. இதனால் கோபமடைந்த விவசாயிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மாண்டியா பால் கூட்டுறவு சங்கத்தின் முன்பு, போராட்டம் நடத்தினர். இதைடுத்து, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஊக்க தொகையை அரசு விடுவித்தது. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை ஐந்து மாதத்திற்கான, ஊக்க தொகையை அரசு இன்னும் விடுவிக்கவில்லை. கடந்த மாதத்திற்கான ஊக்கத்தொகையையும் விடுவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் அரசு 80 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. அரசு மீது விவசாயிகள், கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.'ஊக்கத் தொகையாக கிடைக்கும் பணத்தில் மாடுகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருத்துவ செலவுகளை கவனித்து வந்தோம். இப்போது அரசு ஊக்கத் தொகையை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. ஐந்து வாக்குறுதி திட்டங்களை நம்பி காங்கிரசை ஆதரித்தோம். ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் சொல்படி நடக்கவில்லை. கூடிய விரைவில் ஊக்கத் தொகை விடுவிக்கா விட்டால், அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்' என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.