| ADDED : மே 30, 2024 11:52 PM
புதுடில்லி: தங்கம் கடத்தல் வழக்கில், காங்கிரஸ் எம்.பி., சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சசி தரூர், கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். அதே தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார்.பாங்காக்கில் இருந்து புதுடில்லிக்கு நேற்று வந்த விமானத்தில் தங்கம் கடத்தியது தொடர்பான வழக்கில், சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து சுங்கத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:பாங்காக்கில் இருந்து புதுடில்லிக்கு வந்த விமானத்தில் பயணித்த ஒரு இந்தியரின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது, பாங்காக்கில் இருந்து, 35.22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 500 கிராம் தங்கச் சங்கிலியை கடத்தி வந்ததை அவர் ஒப்புக் கொண்டார். அதை விமான நிலையத்தில் காத்திருந்தவரிடம் ஒப்படைத்ததாக கூறினார். இதையடுத்து, அந்த தங்கச் சங்கிலியுடன், விமான நிலையத்தில் இருந்தவரை கைது செய்துள்ளோம். அவர், எம்.பி.,யின் உதவியாளராக பணியாற்றியுள்ளார். அதன்படி, விமான நிலையத்துக்குள் நுழைவதற்கு சிறப்பு அனுமதி சீட்டை வைத்திருந்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து சசி தரூர் கூறியுள்ளதாவது:என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர், தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 72 வயதான அவருக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளது. அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். மனிதாபிமான அடிப்படையில், என்னுடைய அலுவலகத்தில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த விஷயத்தில் உரிய விசாரணை நடத்தி அவர் குற்றம் செய்திருந்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.