மைசூரு: மைசூரு தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாடும் வகையில், 19 துணை கமிட்டிகள் அமைத்து, கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி உத்தரவிட்டார்.உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, இந்தாண்டு அக்டோபர் 3ம் தேதி முதல், அக்., 12ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளில், சாமுண்டி மலையில், சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி விழா துவங்குகிறது.துவக்க விழாவுக்கான சிறப்பு விருந்தினர் யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இறுதி நாளில், பிரசித்தி பெற்ற ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கிறது.இந்தாண்டு கர்நாடகாவில் நல்ல மழை பெய்து, நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. இதனால், இந்தாண்டு வெகு விமரிசையாக, தசரா விழா கொண்டாடுவதற்கு, முதல்வர் சித்தராமையா தலைமையில் சமீபத்தில் நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.அதன் பின், விழா எப்படி நடத்தலாம் என்பது குறித்து, சமூக நலத்துறை அமைச்சரும், மைசூரு மாவட்ட பொறுப்புத் துறை அமைச்சருமான மஹாதேவப்பா உயர் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், தனி தனி கமிட்டிகள் அமைக்கும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினார்.இதன் அடிப்படையில், 19 துணை கமிட்டிகளை அமைத்து, மைசூரு மாவட்ட லட்சுமிகாந்த் ரெட்டி நேற்று உத்தரவிட்டார்.வரவேற்பு, அழைப்பிதழ், இடம் தேர்வு; ஜம்பு சவாரி ஊர்வலம், தீப்பந்த ஊர்வலம், அலங்கார ஊர்திகள், விவசாய தசரா, விளையாட்டு தசரா, கலாசார தசரா, சிற்ப கலை, மின் விளக்கு அலங்காரம், கவியரங்கம், யோகா தசரா, இளைஞர் கொண்டாட்டம், இளைஞர் தசரா, மகளிர் மற்றும் குழந்தைகள் தசரா, உணவு திருவிழா, துாய்மை, திரைப்பட திருவிழா, மல்யுத்தம், கஜ பயணம் என 19 துணை கமிட்டிகளை, உயர் அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளன.