மைசூரு: மைசூரு நகரின் எம்.ஜி., சாலையில் வாகனங்கள் நிறுத்தவும், காய்கறிகளை கொட்டவும், மாவட்ட நிர்வாகமும், நகர போலீசாரும் தடை விதித்து, ஒன்றரை மாதங்களுக்கு பின் மீண்டும் பழைய பல்லவியாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.மைசூரு நகரில் எம்.ஜி., சாலை, சித்தார்த்தா நகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வருகிறது. நகரின் பெரிய சாலைகளில் இதுவும் ஒன்று. இச்சாலை வழியாக மிருகக்காட்சி சாலை, காரஞ்சி ஏரி, லலித மஹால் அரண்மனை உட்பட பல பகுதிகளுக்கு செல்லலாம்.இச்சாலையில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். அத்துடன், அரசு அலுவலகங்கள், மருத்துவ மனைகள், ஹோட்டல்கள், வர்த்தக கட்டடங்கள் அமைந்து உள்ளன. வாகன நிறுத்தம்
இச்சாலையின் அருகில் வாணிவிலாஸ் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்கள், சாலை ஓரத்தில் நிறுத்துகின்றன. அத்துடன், மார்க்கெட்டில் வியாபாரம் ஆகாத காய்கறிகள், அழுகிய காய்கறிகளை, சாலை ஓரத்தில் கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் கால்நடைகள், நாய்கள் அதிகளவில் நடமாடி வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி இப்பகுதியை ஆய்வு செய்த அப்போதைய கலெக்டர் ராஜேந்திரா, நகர போலீஸ் கமிஷனர் ரமேஷ் ஆகியோர், மானசா சாலை சந்திப்பு முதல் எம்.ஜி., ரோடு சுரங்கப்பாதை வழி இருபுறமும் எந்த வாகனங்களும் நிறுத்த கூடாது; காய்கறிகளை கொட்டக்கூடாது. காய்கறிகளை, மார்க்கெட்டில் தான் இறக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். அன்று முதல் எந்த வாகனங்கள் நிறுத்தப்படுவதுமில்லை; காய்கறிகளும் கொட்டப்படுவதில்லை. பழைய பல்லவி
சமீபத்தில் மாநில காங்கிரஸ் அரசை எதிர்த்து பா.ஜ., - ம.ஜ.த., நடத்திய பாதயாத்திரை, காங்கிரசின் மக்கள் இயக்க கூட்டம் நடந்ததால், மீண்டும் பழைய பல்லவியாக, இச்சாலையில் வாகனங்கள் நிறுத்த துவங்கி உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து உள்ளது.இது தொடர்பாக மைசூரு மாநகராட்சி வட்டாரங்களில் கேட்ட போது, 'தற்போதைய சூழ்நிலையில் அங்குள்ளவர்களை, போலீஸ் பாதுகாப்புடன் தான் அகற்ற முடியும்' என்றனர்.� நகரின் எம்.ஜி., சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட பின், சுலபமாக சென்ற வாகனங்கள் - கோப்பு படம் � மீண்டும் சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல். இடம்: மைசூரு.