உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல் நமோ பாரத் ரயில் குஜராத்தில் பிரதமர் துவக்கம்

முதல் நமோ பாரத் ரயில் குஜராத்தில் பிரதமர் துவக்கம்

ஆமதாபாத், நாட்டின் முதல், 'நமோ பாரத் விரைவு ரயில்' சேவையை பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் நேற்று துவக்கி வைத்தார். குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் - ஆமதாபாத் இடையே, 'வந்தே மெட்ரோ' ரயில் சேவையை மத்திய அரசு அறிவித்தது. இதை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைப்பதற்கு சில மணி நேரம் முன், 'நமோ பாரத் விரைவு ரயில்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.புஜ் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 4:15 மணிக்கு புறப்பட்ட ரயிலை, ஆமதாபாதில் இருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.நகரங்களுக்குள் குறைந்த துாரம் இயக்கப்படும் ரயில் சேவை மெட்ரோ ரயில் என்றழைக்கப்படும் காரணத்தால், நகரங்களுக்கு இடையிலான நீண்ட துார ரயில் சேவையை வந்தே மெட்ரோ என்பதற்கு பதில், 'நமோ பாரத்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.புஜ் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5:05 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காலை 10:50 மணிக்கு ஆமதாபாத் வந்தடையும். 360 கி.மீ., துாரத்தை 5 மணி நேரம் 45 நிமிடங்களில் கடக்கிறது. மீண்டும் ஆமதாபாதில் இருந்து மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு, இரவு 11:20 மணிக்கு புஜ் சென்றடைகிறது. இடையே ஒன்பது ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. கட்டணம் 455 ரூபாய். பொதுமக்களுக்கான சேவை, இன்று முதல் துவங்குகிறது.வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில், புஜ்ஜில் இருந்து சனிக்கிழமைகளிலும், ஆமதாபாதில் இருந்து ஞாயிறுகளிலும் இயக்கப்படாது.

சிறப்பம்சங்கள்

 மொத்தம் 12 பெட்டிகள், 1,150 பயணியர் அமர்ந்தும், 2,058 பேர் நின்றபடியும்பயணிக்க முடியும் குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாய், அதிகபட்ச கட்டணம் 455 ரூபாய் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும் முழுதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகள், குஷன் வைத்த வசதியான இருக்கைகள், நவீன உள் அலங்கார வடிவமைப்புகள் விபத்துகளை தவிர்க்கும், 'கவச்' தொழில்நுட்பம், தீ விபத்து எச்சரிக்கை கருவிகள், தீயை அணைக்கும் வசதிகள், அவசர கால விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக்கூடிய கழிப்பறை வசதிகள், 'மொபைல் போன் சார்ஜ்' செய்யும் வசதி, 'சாக்கெட்'கள், உணவு வசதி, கண்காணிப்பு கேமரா, ஆபத்து நேரங்களில் ஓட்டுனருடன் பேசும் வசதிகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி