உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்குறுதி! ம.ஜ.த., தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை: முன்னாள் பிரதமர் தேவகவுடா திட்டவட்டம்

வாக்குறுதி! ம.ஜ.த., தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை: முன்னாள் பிரதமர் தேவகவுடா திட்டவட்டம்

பெங்களூரு: ''லோக்சபா தேர்தலில் ம.ஜ.த., வெற்றி பெற்றால், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவது உறுதி பா.ஜ., மற்றும் காங்கிரசும், தங்கள் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், இதுபோன்று உறுதி அளிக்க வேண்டும்,'' என முன்னாள் பிரதமர் தேவகவுடா திட்டவட்டமாக தெரிவித்தார்.கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஆளுங்கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் தேர்தலுக்காக தயாராகின்றனர். பா.ஜ., 20 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 24 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. கூட்டணி கட்சியான ம.ஜ.த.,வுக்கு கோலார், மாண்டியா, ஹாசன் தொகுதிகளை பா.ஜ., ஒதுக்கியுள்ளது.இந்த மூன்று கட்சிகளும் இன்னும் தேர்தல் அறிக்கை வெளியிடவில்லை. தற்போது வாக்குறுதிகளை வெளியிட, ம.ஜ.த., தயாராகி வருகிறது. இதில் மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்தும் வாக்குறுதியை சேர்க்க, இந்த கட்சி முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, பெங்களூரில் நேற்று கூறியதாவது:பெங்களூருக்கு குடிநீர் வழங்கும் நோக்கில், மேகதாது அணை திட்டம் வகுக்கப்பட்டது. ம.ஜ.த., தேர்தல் அறிக்கையில், மேகதாது திட்டத்தை செயல்படுத்தும் வாக்குறுதி சேர்க்கப்படும். முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முதல்வர் சித்தராமையாவும், தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும், இத்திட்டத்தை சேர்க்க வேண்டும்.இந்த விஷயத்தில் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்து, மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்துவேன். ஏற்கனவே மேகதாது திட்டம் தொடர்பாக, விரிவான கடிதத்தை பிரதமருக்கும், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சருக்கும் எழுதினேன். அதிகாரிகள் திட்டத்தை பற்றி ஆய்வு செய்து 30 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்கலாம் என, கூறியுள்ளனர். எனவே இந்த திட்டத்துக்கு, பிரதமர் அனுமதி அளிக்க வேண்டும்.தமிழக முதல்வர் ஸ்டாலின், தங்கள் கட்சி தேர்தல் அறிக்கையில், எந்த காரணத்தை கொண்டும் மேகதாது அணை கட்ட விடமாட்டோம் என, கூறியுள்ளார். காவிரி நீர்ப்பாசன பகுதியில், பெங்களூரு உட்பட ஒன்பது மாவட்டங்கள், 22 தாலுகாக்கள் வருகின்றன. இப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்க, மேகதாது திட்டம் அவசியம்.பெங்களூரில் ஐந்து மாதமாக, குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னை காரணமாக, பலரும் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு, வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். குடிநீர் பிரச்னைக்கு மாநில அரசு தீர்வு காணவில்லை. இத்தகைய சூழ்நிலையில், தமிழக அரசு மேகதாது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது வருத்தமளிக்கிறது.எனவே, இரண்டு மாநிலங்களின் குடிநீர் சூழ்நிலை, தண்ணீர் இருப்பு, பயிர்களுக்கு தேவைப்படும் தண்ணீர் உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில், திட்டம் வகுக்க வேண்டும் என, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிடும்படி, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளேன். மேகதாது திட்டம் தொடர்பான விரிவான அறிக்கை காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் நிர்வகிப்பு ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஐந்து ஆண்டுகள் கடந்தும், இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. லோக்சபா தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவது உறுதி. பா.ஜ., மற்றும் காங்கிரசும் இதுபோன்று உறுதியளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை