| ADDED : ஜூலை 31, 2024 05:42 AM
பெங்களூரு : 'சொத்து வரி செலுத்துவதற்கு சலுகைகள் பெறுவதற்கு இன்றே கடைசி நாள்' என்று பெங்களூரு மாநகராட்சி தெரிவித்துள்ளது.பெங்களூரில் பல கட்டடங்கள், நிலத்துக்கு ஆண்டுக்கணக்கில் சொத்து வரி செலுத்தாமல், அதன் உரிமையாளர்கள் அலட்சியப்படுத்தி வந்தனர். இப்படி பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல் உள்ளவர்கள், பாக்கி மொத்த வரியையும் ஒரே முறை செலுத்தினால், அபராத தொகை 100 ரூபாயும், முழு வட்டியும் ரத்து செய்வதாக, பெங்களூரு மாநகராட்சி கூறி இருந்தது.மேலும், 2024 - 25ம் ஆண்டுக்கான சொத்து வரியை முன்கூட்டியே செலுத்தினால், 5 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு சலுகையும் பெறுவதற்கு, இன்றே கடைசி நாள். இதற்காக, சொத்து உரிமையாளர்கள் வரியை செலுத்தி வருகின்றனர். ஆன்லைனிலும், மாநகராட்சி அலுவலகங்களுக்கு நேரிலும் சென்றும் செலுத்தலாம்.இந்நிலையில், இதுவரை சொத்து வரி செலுத்தாதோர், அவசர அவசரமாக ஆவணங்களை எடுத்து கொண்டு மாநகராட்சி அலுவலகங்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இன்று கடைசி நாள் என்பதால், நள்ளிரவு வரை மாநகராட்சி வருவாய் பிரிவு அலுவலகங்களை திறந்திருக்கும்படி, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டுள்ளார்.