| ADDED : ஜூலை 04, 2024 01:20 AM
சிவான், பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள சிவான் மாவட்டத்தில், கண்டகி ஆற்றின் குறுக்கே கடந்த 1982ல் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்தது.கடந்த, 15 நாட்களுக்குள், மாநிலத்தில் ஏழு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. ஏற்கனவே, சிவானில் ஒரு பாலம் இடிந்து விழுந்த நிலையில், இது இரண்டாவது நிகழ்வு. இந்த சிறிய பாலம், பல கிராமங்களை இணைப்பதால், போக்குவரத்து வசதி பாதிக்கப்பட்டுள்ளது.பாலங்கள் இடிந்து விழுவதற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.மூத்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, பாலத்தில் பழுது பார்க்கும் பணி நடந்து வந்த நிலையில், கனமழை காரணமாக பாலம் இடிந்து விழுந்துள்ளதாக துணை வளர்ச்சி ஆணையர் முகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே, மதுபானி, அராரியா, கிழக்கு சம்கரன் மற்றும் கிஷன்கஞ்ச் போன்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுந்தன.இதனால், பாலங்களை கடந்து செல்லவே பீஹார் மக்கள் அச்சப்படும் நிலை உருவாகி உள்ளது.