உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஈ.டி.,க்கு ரெஸ்ட்; சி.பி.ஐ., நெக்ஸ்ட் கெஜ்ரிவாலுக்கு மூன்று நாள் காவல்

ஈ.டி.,க்கு ரெஸ்ட்; சி.பி.ஐ., நெக்ஸ்ட் கெஜ்ரிவாலுக்கு மூன்று நாள் காவல்

புதுடில்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, சி.பி.ஐ., கைது செய்ததை அடுத்து, அவரை மூன்று நாட்கள் சி.பி.ஐ., காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. டில்லி மதுபானக் கொள்கை ஊழலில் நடந்த பண மோசடி வழக்கில், முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மார்ச் 21ல், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.மே 10ல், உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின்படி, லோக்சபா தேர்தலில், ஜூன் 1 வரை பிரசாரம் செய்த அவர், ஜூன் 2ல் திஹார் சிறையில் மீண்டும் சரணடைந்தார். இதையடுத்து, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஜாமின் கோரி, முதல்வர் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இதை கடந்த 20ல் விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கியது.இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை, நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

முறைகேடு

டில்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்நிலையில், மதுபானக் கொள்கை மோசடி வழக்கில், டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வைத்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். மேலும் அவரை, ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், அவர்கள் ஆஜர்படுத்தினர்.சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், 'மதுபானக் கொள்கை வழக்கில் நடந்த முறைகேடுகள் அனைத்தும் கெஜ்ரிவாலுக்கு தெரிந்தே நடந்துள்ளன. 'இதில், அவரை உரிய ஆவணங்களுடன் விசாரிக்க வேண்டியுள்ளது. கெஜ்ரிவாலை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, “சி.பி.ஐ., மனு குறித்து எனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதில் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்,” என்றார்.

ஜாமினுக்கு தடை

இருதரப்பு வாதங்களை கேட்ட ரோஸ் அவென்யூ நீதிமன்றம், கெஜ்ரிவாலை மூன்று நாட்கள் சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.இதற்கிடையே, ஜாமினுக்கு தடை விதித்த டில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திரும்ப பெற்றார்.சி.பி.ஐ., கைது செய்துள்ளதை எதிர்த்தும், ஜாமின் கோரியும் அவர் புதிய மனு தாக்கல் செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

'சர்வாதிகாரம்'

சமூக வலைதளத்தில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா வெளியிட்ட பதிவு:என் கணவர் கெஜ்ரிவாலுக்கு கடந்த 20ல் ஜாமின் கிடைத்தது. ஆனால், இதற்கு அமலாக்கத் துறை உடனடியாக தடை வாங்கியது.அடுத்த நாளே, அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு சி.பி.ஐ., கைது செய்தது. சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளியே வருவதை தடுக்க, ஒட்டு மொத்த அமைப்பும் முயற்சிக்கிறது. இது சட்டம் அல்ல. இது தான் சர்வாதிகாரம்; எமர்ஜென்சி.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை