உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சந்தேஷ்காலி விவகார புது வீடியோ திரிணமுல் காங்., - பா.ஜ., குஸ்தி

சந்தேஷ்காலி விவகார புது வீடியோ திரிணமுல் காங்., - பா.ஜ., குஸ்தி

கோல்கட்டா : மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலியில், போராட்டத்தில் பங்கேற்க பெண்களுக்கு பணம் வழங்கப்பட்டது என, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறுவது போல் வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலி என்ற பகுதியில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆளும் திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

தொடர் போராட்டம்

மேலும், தங்களிடம் இருந்து நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரித்ததாகவும் கூறி பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்த இந்த சம்பவத்தில், நீண்ட நாட்களுக்கு பின், குற்றம் சாட்டப்பட்ட ஷாஜஹான் ஷேக் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், ஆளும் திரிணமுல் காங்., - எதிர்க்கட்சியான காங்., ஆகியவை பரஸ்பரம் குற்றம் சாட்டின.இதற்கிடையே, சந்தேஷ்காலி வன்முறை தொடர்பாக, கடந்த 4ல் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியானது. அதில், பா.ஜ.,வைச் சேர்ந்த சந்தேஷ்காலி மண்டல தலைவர் கங்காதர் கயல், கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் உத்தரவுப்படி, சந்தேஷ்காலியில் போராட்டங்கள் நடந்ததாகக் கூறுவது பதிவாகி உள்ளது. இதையடுத்து, பா.ஜ.,வினர் தன்னை மிரட்டி போலீசில் பாலியல் புகார் கொடுக்கக் கூறியதாக பெண் ஒருவர் கூறினார். தொடர்ந்து, பாசிர்ஹாட் தொகுதி பா.ஜ., வேட்பாளர் ரேகா பத்ரா, 'ஜனாதிபதியை சந்திக்க, டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்களை எனக்கு தெரியாது' என்றார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, 'சந்தேஷ்காலி வன்முறை பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பது தற்போது தெளிவாகத் தெரிகிறது. 'முழு சம்பவத்துக்கும் பா.ஜ., தான் காரணம்' என, திரிணமுல் காங்., குற்றம் சாட்டியது. இதை திட்டவட்டமாக மறுத்த பா.ஜ., திருத்தப்பட்ட வீடியோக்களை திரிணமுல் காங்., பரப்புவதாகக் குற்றம்சாட்டியது.

சமூக வலைதளம்

இந்நிலையில், இந்த விவகாரத்தில் நேற்று முன்தினம் இரவு புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், 'திரிணமுல் காங்., நிர்வாகி ஷாஜஹான் ஷேக்கை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட, 70க்கும் மேற்பட்ட பெண்கள், தலா 2,000 ரூபாய் பெற்றுள்ளனர். 'போராட்டத்தில், 30 சதவீத பெண்கள் இருக்க வேண்டும். 2.5 லட்சம் ரூபாய் இன்னும் தேவைப்படும்' என, பா.ஜ., நிர்வாகி கங்காதர் கயல் கூறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கிடையே, சந்தேஷ்காலியில் நேற்று பா.ஜ., - திரிணமுல் கட்சியினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை