உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3,500 வீட்டுமனை ஒதுக்கீடு ஆவணங்கள் மூடாவில் மாயமாகி விட்டதாக அதிர்ச்சி

3,500 வீட்டுமனை ஒதுக்கீடு ஆவணங்கள் மூடாவில் மாயமாகி விட்டதாக அதிர்ச்சி

மைசூரு : 'மூடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், 3,500 வீட்டுமனைகள் யார், யாருக்கு வழங்கப்பட்டன என்பதற்கான ஆவணங்களே இல்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.'மூடா'வில் நடந்துள்ள முறைகேடு விஷயம், சில மாதங்களாக கர்நாடகாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு, சட்டவிரோதமாக 14 வீட்டுமனைகள் வழங்கப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நிறைய வித்தியாசம்

பா.ஜ., அரசு இருந்தபோது, 'மூடா'வில் மனைகள் வழங்கப்பட்டதாக முதல்வர் உட்பட, அமைச்சர்கள் பலரும் கூறுகின்றனர். 2021 முதல் 2024 வரை வழங்கப்பட்ட மனைகள் குறித்து, தகவல் தெரிவிக்கும்படி அதிகாரிகளுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி அதிகாரிகள் அளித்த புள்ளி விபரங்களுக்கும், 'மூடா' வழங்கிய மனைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பது தெரிய வந்துள்ளது. 3,500 மனைகள் கணக்கிலேயே காட்டப்படவில்லை என, சில அதிகாரிகள் கூறுகின்றனர்.இந்த வீட்டுமனைகள் யார், யாருக்கு வழங்கப்பட்டன என்பதற்கான ஆவணங்களே இல்லை. இது பற்றி விரிவாக விசாரணை நடத்த வேண்டும். 'மூடா'வின் முந்தைய கமிஷனர், செயலர், சிறப்பு தாசில்தார், கமிஷனரின் அந்தரங்க உதவியாளர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:'மூடா'வில் வீட்டுமனை வழங்குவதற்கு முன்பு, பயனாளிகளுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் கடிதம் வழங்கப்படும். இதற்கென்றே பார்கோட் உள்ள சிறப்பு பாண்ட் ஷீட் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு கடிதத்துக்கும் தனித்தனி எண் இருக்கும். நிர்ணயித்த அளவில், கடிதங்களை அச்சிட்ட பின், பொறியாளர் பதவியில் உள்ள அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.

மூடி மறைப்பு

இந்த கடிதங்களை பயன்படுத்த விரும்புவோர், சம்பந்தப்பட்ட ரிஜிஸ்டரில், ஒவ்வொரு கடிதத்தின் விபரங்களை குறிப்பிட வேண்டும். யார், யாருக்கு வீட்டுமனை வழங்கப்பட்டது என்ற தகவலும் இருக்க வேண்டும். இந்த தகவல்களை, சில அதிகாரிகள் மூடி மறைத்துள்ளனர்.விதிகளின்படி, இந்த ஒப்புதல் கடிதங்களை வழங்கும், பயன்படுத்தும் அதிகாரம் 'மூடா' கமிஷனருக்கு மட்டுமே உள்ளது. அவரது அனுமதி பெற்று, செயலர் பயன்படுத்தலாம். கடிதம் கிழிந்திருந்தாலும், அதை சம்பந்தப்பட்ட பிரிவுக்கு திருப்பிக் கொடுத்து, ரிஜிஸ்டரில் பதிவு செய்ய வேண்டும். இந்த ஒப்புதல் கடிதங்கள், சாதாரண கிளார்க்குக்கும் கிடைத்துள்ளது.சட்டவிரோதமாக மனைகள் வழங்கப்பட்டதால், ஜூலை 1ல் நகர வளர்ச்சித்துறை அமைச்சர் பைரதி சுரேஷ், 'மூடா' அலுவலகத்துக்கு வந்து ஆய்வு செய்தார். கமிஷனர் தினேஷ் குமார், செயலர் சேகரை இடமாற்றம் செய்துள்ளதாகவும் அறிவித்தார். அரசின் அடுத்த உத்தரவு வரும் வரை, எந்த முடிவும் எடுக்க கூடாது என, உத்தரவிட்டிருந்தார்.ஆனால் கமிஷனரின் அந்தரங்க உதவியாளர் பிரசாந்த், ஜூலை 3ல், 500 பாண்ட் ஷீட்டுகளை பெற்றுள்ளார். கமிஷனர் இடமாற்றமாகியும், பாண்ட் ஷீட்டுகளை அவர் எப்படி பெற்றார்? யார், யாருக்கு மனை வழங்கப்பட்டது என்பது குறித்தும், விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பாண்ட் ஷீட்

ஓய்வு பெற்ற 'மூடா' அதிகாரி நடராஜ் கூறியதாவது:'மூடா'வில் அதிகாரிகளின் கையெழுத்தை போர்ஜரி செய்து, விதிமீறலாக ஆவணங்களை உருவாக்கி, மனைகள் பதிவு செய்யப்பட்டன. இதைத் தடுக்கும் நோக்கில், 2007ல் சிறப்பு வடிவம் கொண்ட, செக்யூரிட்டி பாண்ட் ஷீட் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.பல்கலைக்கழகங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை போன்று, 'மூடா' வீட்டுமனை பாண்ட் ஷீட்டுகள் வடிவமைக்கப்பட்டன. இதை போலியாக தயாரிக்க முடியாது. ஒவ்வொரு பாண்ட் ஷீட்டிலும், பார்கோட் அடிப்படையிலான சிறப்பு எண் உள்ளது. இதை ஸ்கேன் செய்தால், உண்மையானதா, போலியா என்பது தெரிந்துவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை