கோடை மலர் கண்காட்சி மூணாறில் துவக்கம் கட்டண உயர்வால் அதிருப்தி
மூணாறு:கேரள மாநிலம் மூணாறில் அரசு தாவரவியல் பூங்காவில் கோடை கால மலர் கண்காட்சி நேற்று துவங்கிய நிலையில், நுழைவு கட்டணத்தை திடீரென உயர்த்தியதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.மூணாறில் மாவட்ட சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான தாவரவியல் பூங்காவில் ஆண்டு தோறும் கோடையில் மலர் கண்காட்சி நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு மலர் கண்காட்சி நேற்று துவங்கியது. நூற்றுக்கணக்கான வகை வண்ணப்பூக்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. தற்போது புதிதாக தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ள அணில் உருவம் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.இதய வடிவில் 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ' 'செல்பி பாய்ன்ட்' டில் பயணிகள் ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்கின்றனர். மலர் கண்காட்சி மே 12ல் நிறைவு பெறுகிறது.காலை 9:00 மணிமுதல் இரவு 9:00 மணி வரை பார்வையிடலாம்.பூங்காவில் நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.60, சிறுவர்களுக்கு ரூ.35 வசூலிக்கப்பட்டது. தற்போது அக்கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு நபர் ஒன்றுக்கு ரூ.100, சிறுவர்களுக்கு ரூ.50 வசூலிக்கின்றனர்.அதனால் அதிருப்தி அடைந்த சுற்றுலாப் பயணிகள் கட்டணத்தை ஏற்கனவே வசூலித்தபடி குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.