தங்கச்சுரங்க தொழிலாளர் உழைப்பின் அடையாளம் என நெஞ்சை நிமிர்த்தி, தங்கவயல் மக்கள் சொல்லி வரும் சயனைட் மண் மலை, இன்னும் சில மாதங்களில் இடம் பெயரப்போகுது. வட மாநிலத்திற்கு கூட்ஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.தங்கவயலில் 3,000 ஏக்கர் நிலத்தில், 32 மில்லியன் டன் சயனைட் மண்ணில், கண்ணுக்கு தெரியாமல் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது. இதை சுத்திகரித்து எடுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் எப்படி, எங்கே நடக்கும் என்பது தான் கேள்வி குறியாக இருந்து வந்தது.தங்கவயலிலேயே சுத்திகரிப்பு செய்யப்படுமென இங்குள்ள மக்கள் எதிர்ப்பார்த்து வந்தனர். அப்படி தங்கம் பிரிக்கும் பணியை மேற்கொண்டால், குறைந்தது 1,000 பேருக்காவது வேலை கிடைக்கும் என்று மகிழ்ச்சி அடைந்து வந்தனர். குளோபல் டெண்டர்
சயனைட் மண்ணில் உள்ள தங்கத்தை எடுக்க, 'குளோபல் டெண்டர்' விட வேண்டும் என தொழில் கூட்டுறவு சங்கங்களின் முயற்சியாக இருந்தது. ஆனால், கனிம உற்பத்திக்கு டெண்டர் விட, சட்டத்தில் இடம் இல்லை என மத்திய அரசு கைவிரித்துவிட்டது. இதனால், தனியாரை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.இப்பணியை தங்கவயலில் செய்யாமல், சயனைட் மலை மண்ணை, கூட்ஸ் ரயில்கள் வாயிலாக வட மாநிலத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சயனைட் மலை மண்ணை எடுப்பதற்காக, சயனைட் மலை உள்ள 13 இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதற்காக, செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட உள்ளனராம். நிபுணர்கள் கருத்து
சயனைட் மண்ணை வெட்டி எடுக்கும்போது, துாசி கடுமையாக எழும். இதனால் இருமல், சுவாச கோளாறு, மூச்சடைப்பு, சிலிகாசிஸ் நோய் தாக்கும். 25 கி.மீ., வரை பயிர்கள் பாதிக்கும். இவற்றை தடுக்க முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என நிபுணர்கள் கருதுகின்றனர்.ஏற்கனவே சயனைட் மண்ணில் இருந்து சுத்திகரிப்பு செய்து, 'ஷீலைட்' என்ற உலோகம் பிரித்தெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.சயனைட் மண்ணை விற்பனை செய்யும் தொகையிலாவது, முன்னாள் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்குவரா என, அவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.- நமது நிருபர் -