பெங்களூரு: ''பெங்களூரில் சாலை பள்ளங்களை மூடும் பணிகளை மேற்பார்வையிட, புதிய செயற்படை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது,'' என பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்தார்.கர்நாடக முதல்வர் சித்தராமையா, சில நாட்களுக்கு முன் நகர் வலம் வந்த போது, மழைக்காலத்தை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். சாலை பள்ளங்களை விரைவில் மூடும்படி உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவுப்படி சாலை பள்ளங்களை மூட, பெங்களூரு மாநகராட்சி நடவடிக்கை எடுத்துஉள்ளது.இது குறித்து, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியதாவது:பெங்களூரு மாநகராட்சி எல்லையில், 12,878 கி.மீ., நீள சாலைகள் உள்ளன. முதல்வரின் உத்தரவுப்படி, சாலைகளின் பள்ளங்களை மூடும் பணிகள் துவக்கப்பட்டன. ஏற்கனவே 1,500 பள்ளங்கள் மூடப்பட்டன. விரைவில் நகர் முழுதும் உள்ள பள்ளங்கள் மூடப்படும்.ஆர்.ஆர்.நகர், தாசரஹள்ளி மண்டலங்களை தவிர, மற்ற மண்டலங்களில், வரும் 31க்குள் அனைத்து பள்ளங்களும் மூடப்படும். ஆர்.ஆர்.நகர், தாசரஹள்ளியில் 1,200க்கும் மேற்பட்ட பள்ளங்கள் உள்ளன. எனவே பள்ளங்களை மூடும் காலக்கெடுவை, ஜூன் 4 வரை நீட்டித்து உள்ளோம்.சாலை பள்ளங்களை அடையாளம் காண, ஜூன் 6ல் புதிய மொபைல் செயலி வெளியிடப்படும். மழைக்காலத்தில் பிரச்னைகளுக்கு தீர்வு காண போக்குவரத்து போலீசார், மாநகராட்சி மார்ஷல்களிடம் இருந்து, தகவல் பெறப்படும். ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் பயன்படுத்தி, 1,400 கி.மீ., தொலைவிலான பாதை சீரமைக்கப்படும். இது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.சாலைகளின் பள்ளங்களை மூடும் பணிகளை மேற்பார்வையிட, ஒவ்வொரு மண்டலத்திலும், டிராபிக் ஏ.சி.பி., அடங்கிய செயற்படை கமிட்டி அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.