உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமர்க்களமாக துவங்கிய லோக்சபா புதிய எம்.பி.,க்கள் பதவியேற்பு

அமர்க்களமாக துவங்கிய லோக்சபா புதிய எம்.பி.,க்கள் பதவியேற்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, 18வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. பிரதமர், மத்திய அமைச்சர்கள், மூத்த எம்.பி.,க்கள் பதவியேற்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.லோக்சபா தேர்தல் முடிந்து, மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவி ஏற்ற நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது.புதிய எம்.பி.,க்கள் அனைவரும் காலை முதலே பார்லிமென்ட் வரத்துவங்கினர். காலையில் காங்கிரஸ் எம்.பி.,க்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்ததும், தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் சோனியா, ராகுல் உட்பட பலரும் ஊர்வலமாக புறப்பட்டனர்.காந்தி சிலை வைக்கப்பட்டு இருந்த பழைய இடத்திற்கு சென்றனர். அந்த காலி இடத்தில் கூடி மரியாதை செலுத்திவிட்டு, அங்கிருந்து பேரணியாக பார்லிமென்டிற்குள் நுழைந்தனர்.லோக்சபாவுக்குள் நுழைந்து இருக்கைகளில் அமர்ந்த அவர்கள், ஆளும் தரப்பை நோக்கி ஆரவாரமாக வணக்கங்களை சொல்ல, பதிலுக்கு பா.ஜ., - எம்.பி.,க்களும் ஆரவாரம் காட்ட, சபை களை கட்டியது.முன்னதாக காலையில், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்ட இடைக்கால சபாநாயகர் பாத்ரூஹரி மஹதாப், தன் இருக்கையில் வந்து அமர்ந்ததும், புதிய எம்.பி.,க்களை வரவேற்பதாக கூறிவிட்டு, வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராகுல் ராஜினாமா செய்துள்ள தகவலை அறிவித்தார்.அடுத்து, எம்.பி.,க்கள் உறுதிமொழி ஏற்கும்போது, தனக்கு உதவிட அமைக்கப்பட்ட குழுவில் உள்ள மூத்த எம்.பி.,க்களின் பெயர்களை வாசித்தார்.இடைக்கால சபாநாயகர், தங்களது பெயர்களை வாசிக்கும்போதே கொடிக்குன்னில் சுரேஷும், டி.ஆர்.பாலுவும் அமைதியாக எழுந்து சபையை விட்டு வெளியேறினர்.பின், முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டார். பா.ஜ., - எம்.பி.,க்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பி ஆரவாரம் செய்ய, அதற்கு மத்தியில் அவர் கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.அப்போது, காங்., உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள், தங்கள் கைகளில் ஏற்கனவே தயாராக எடுத்து வந்திருந்த அரசியலமைப்பு சட்டப் புத்தகங்களை துாக்கிப் பிடித்தபடி கோஷமிட்டனர்.பின், கொடிக்குன்னில் சுரேஷ், டி.ஆர்.பாலு, சுதிப் பந்தோபாத்யா ஆகியோர் அழைக்கப்பட்டனர். அவர்கள் சபையை புறக்கணித்ததால், அடுத்தடுத்து மூத்த அமைச்சர்கள் உறுதிமொழி ஏற்றனர்.உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிமொழி ஏற்றபோதும், காங்., உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் அரசியலமைப்பு சட்டப் புத்தகங்களை கைகளில் துாக்கி காட்டினர்.பின் வரிசையில் அமரப் போன ராகுலை, காங்., - எம்.பி.,க்கள் பலரும், முன்வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர் அமரும் முதல் இருக்கையில், வலுக்கட்டாயமாக அமர வைத்தனர்.இந்நிலையில், எம்.பி.,க்கள் பதவியேற்பு நிகழ்வு இன்றும் தொடரவுள்ளது. அகரவரிசைப்படி பதவியேற்பு நடப்பதால், தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் இன்று மதியம் 1:00 மணி முதல் 3:00 மணிக்குள் பதவியேற்க உள்ளனர்.

வெவ்வேறு மொழிகளில் பிரமாணம்

 பிரதமர் நரேந்திர மோடி, ஹிந்தியில் பதவியேற்றார். அப்போது சபையில் இருந்த உறுப்பினர்கள், 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கம் எழுப்பினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, தொலை தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் ஹிந்தியில் பதவியேற்றனர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடியா மொழியில் பதவியேற்றார். அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், 'நீட், நீட்' என, கோஷமிட்டனர். கேரளாவின் பா.ஜ., முதல் எம்.பி.,யான மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, மலையாளத்தில் பதவியேற்றார்  மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், டோக்ரியிலும்; மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அசாமி மொழியிலும், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெலுங்கிலும் பதவியேற்றனர் மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் கன்னடத்திலும், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெலுங்கிலும் பதவியேற்றனர்.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை