| ADDED : மே 03, 2024 07:01 AM
தட்சிண கன்னடா: ஓட்டுச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா திருடப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.கர்நாடகாவில் முதல் கட்டமாக தட்சிண கன்னடா உட்பட 14 லோக்சபா தொகுதிகளுக்கு ஏப்., 26ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் பெல்தங்கடியில் உள்ள கோபாலகிருஷ்ணா அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில், ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.பதற்றமான ஓட்டுச்சாவடிகளை நேரடியாக கண்காணிக்கும் வகையில், ஏப்., 24ம் தேதி 'வெப் கேமரா' பொருத்தப்பட்டிருந்தது. ஏப்., 26ம் தேதி ஓட்டுப்பதிவு முடிந்தவுடன், 27, 28ம் தேதி வார இறுதி நாள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஏப்., 29ம் தேதி மதியம் மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவின்படி, பஞ்சாயத்து ஊழியர் பள்ளி அறையை திறந்தார்.அப்போது ஓட்டுச்சாவடியில் இருந்த 'வெப் மேகமரா' மட்டும் திருடப்பட்டிருந்தது. சோலார் விளக்கு, கேபிள் ஒயர்கள், நாற்காலிகள் அப்படியே இருந்தன.உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். உப்பினங்கடி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் ஆய்வு நடத்தினர்.ஓட்டுச்சாவடி அறை மூடப்பட்டிருந்த போதும், அதை பலமாக தள்ளினால் கதவு திறந்து கொள்ளும் வகையில் மோசமான நிலையில் இருந்துள்ளது. கலெக்டர் முல்லை முகிழன் கூறுகையில், ''இங்கு பொருத்தப்பட்டிருந்த வெப் கேமராவை, நேரடியாக பார்க்கலாம். அதில், காட்சிகளை பதிவு செய்ய முடியாது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.