| ADDED : மே 13, 2024 06:30 AM
சிக்கபல்லாப்பூர்: ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் ஜன்னல்கள் மீது பொருத்தப்பட்டிருந்த தகடு சீட்கள் கழன்றதால் சிக்கபல்லாப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.மாநிலத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இயந்திரங்கள் உள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.அறையின் உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையில் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். வெளிபுறத்தில், துப்பாக்கி ஏந்திய போலீஸ், துணை ராணுவத்தினர் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில், சிக்கபல்லாப்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேவனஹள்ளி முதுகுர்கி அருகில் உள்ள நாகர்ஜுனா கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளன. உள்ளே யாரும் பார்க்காதவாறு, அறை ஜன்னல்கள், சீட் தகடுகளால் மூடப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் சில தகடுகள் திடீரென கழன்று விழுந்தன. இதை கவனித்த அப்பகுதியினர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.உடனே அங்கு வந்த உயர் அதிகாரிகள், கிரேன் மூலம், ஜன்னல்கள் இருக்கும் 2வது மாடிக்கு ஊழியர்களை அனுப்பி, சீட் தகடுகளை மீண்டும் பொருத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.ஓட்டு எண்ணும் ஜூன் 4ம் தேதி தான், வேட்பாளர்கள் அல்லது அவர்களின் ஏஜன்ட்கள் முன்னிலையில், இயந்திரங்கள் உள்ள அறைகள் திறக்கப்பட வேண்டும்.இதனால், அறையை திறக்காமல், வெளிப்புறத்தில் இருந்து, கிரேன் மூலம் சென்று ஊழியர்கள் சரி செய்தது குறிப்பிடத்தக்கது.