| ADDED : ஜூலை 26, 2024 12:04 AM
மும்பை: மும்பையில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், இன்றும் மிக கனமழைக்கான, 'ரெட் அலெர்ட்' விடப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பையைச் சுற்றியுள்ள முக்கிய நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏழு ஏரிகளில், இரண்டு முக்கிய ஏரிகளான மோடக் - சாகர் மற்றும் விஹார் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. சியோன், செம்பூர், அந்தேரி உள்ளிட்ட இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.மும்பையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், போக்கு வரத்து முடங்கியுள்ளது. அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது.அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைதளத்தில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கனமழை நீடிப்பதாலும், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இருப்புப் பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. குறைந்த அளவே ரயில்கள் இயக்கப்படுவதால் பயணியர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மும்பை விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், விமான சேவை முடங்கியது. 30க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.புனே நகரிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இங்கு, மின்சாரம் தாக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தஹ்மினியில் மலைப்பாதையை ஒட்டிய உணவகம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலியானார்.லாவாசா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ள மூன்று பேரை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர். லோனோவாலா அருகில் உள்ள மலாவ்லி பகுதியில் சிக்கியிருந்த 29 சுற்றுலா பயணியர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.புனே மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லுாரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ரப்பர் படகுகள் வாயிலாக மீட்டனர். முக்கிய பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், ஹெலிகாப்டர் வாயிலாக அங்குள்ளவர்களை மீட்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மழை தொடர்ந்து மிரட்டி வரும் சூழலில், மும்பை மற்றும் புனேவுக்கு இன்று மிக கனமழைக்கான ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது.