மூன்று சுயேச்சைகள் வாபஸ் ஹரியானா அரசுக்கு சிக்கல்
சண்டிகர் ஹரியானாவில் பா.ஜ., அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர் நேற்று வாபஸ் வாங்கினர். இதனால், அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில் முதல்வர் நாயப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மொத்தம் 90 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள சட்டசபையில், இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளதால் தற்போதைய எண்ணிக்கை 88 ஆக உள்ளது. பெரும்பான்மைக்கு, 44 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு வேண்டும். இதில் பா.ஜ.,வுக்கு 40 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இது தவிர ஆறு சுயேச்சைகளும் அரசுக்கு ஆதரவு அளித்தனர். இந்நிலையில், தற்போது சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களான சோம்பிர் சங்வான், ரந்திர் கோலன் மற்றும் தரம்பால் ஆகியோர் பா.ஜ.,வுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். விவசாயிகள் பிரச்னைகள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக பா.ஜ.,வுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதாகவும், வரும் 25ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் காங்கிரசை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஹரியானா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா கூறியதாவது:மூன்று சுயேச்சைகள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால், அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. நாயப் சிங் சைனி உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து பா.ஜ., தலைவர்கள் கூறுகையில், 'எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. கவர்னர் உத்தரவிட்டால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்போம்' என்றனர்.