| ADDED : ஜன 03, 2024 07:42 AM
பெங்களூரு: பத்தாம் வகுப்பு படிக்கும் அமனா என்ற இளம் கவிஞர் எழுதிய நான்காவது புத்தகத்தை, கர்நாடகா லோக் ஆயுக்தா முன்னாள் தலைமை நீதிபதி சந்தோஷ் ஹெக்டே வெளியிட்டார்.பெங்களூரு தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருபவர் அமனா. சிறு வயதில் இருந்தே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், உலக இலக்கியத்தின் தலைசிறந்த படைப்புகள் என்ற படிப்பை முடித்துள்ளார்.இவர், 6ம் வகுப்பு முதலே கவிதை எழுத ஆரம்பித்தார். ஏற்கனவே, ஆங்கிலம், ஹிந்தி மொழியில் மூன்று கவிதை புத்தகங்களை எழுதி சாதனை படைத்துள்ளார்.இவர், இந்தியாவின் இளைய கவிஞர் சாதனை புத்தகத்திலும்; ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகம், கோவா அரசின் கவுடில்யா ஜூனியர் விருது உட்பட பல்வேறு சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார்.இதுவரை 500க்கும் அதிகமான கவிதைகள் எழுதியுள்ளார். தற்போது, இவர் எழுதிய நான்காவது புத்தகமான, 'கேலோர் ஆப் மிஸ்டரீஸ்' எனும் 'மர்மங்களின் பெருக்கம்' என்ற ஆங்கில புத்தகத்தை, கர்நாடகா லோக் ஆயுக்தா முன்னாள் தலைமை நீதிபதி சந்தோஷ் ஹெக்டே வெளியிட்டார்.கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், பாராட்டியுள்ளார். 'சந்திரயான் - 3' திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், முன்னுரை எழுதியுள்ளார்.தன் சாதனை குறித்து இளம் கவிஞர் அமனா கூறுகையில், ''தாய் லதா, தந்தை ஜெய்வந்த் குமார் ஊக்கத்தால், கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். நான்காவது புத்தகத்தில் கவிதைகள், சிறுகதைகளின் தொகுப்பாகும்,'' என்றார்.