| ADDED : மார் 12, 2024 11:22 PM
பெங்களூரு : மெட்ரோ ரயில் பாதையில், ஒரு நபர் நடந்து சென்றதால், நேற்று ஞானபாரதி - பட்டணகெரே மெட்ரோ ரயில் நிலையம் இடையே 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பெங்களூரு மைசூரு சாலை - செல்லகட்டா இடையே இளஞ்சிவப்பு வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் நேற்று இயங்கி வந்தன. மாலை 3:00 மணியளவில் ஞானபாரதி - பட்டணகெரே மெட்ரோ ரயில் வழிப்பாதையில், ஒரு வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்தார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மெட்ரோ ரயில் ஊழியர்கள், உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். நடந்து சென்ற வாலிபரை பிடித்து, விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவத்தால், மாலை 3:30 மணியளவில் மீண்டும் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கியது. அரைமணி நேரமாக ரயில் வராததால் பயணியர், உரிய நேரத்தில் குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.அந்த வாலிபர், மெட்ரோ ரயில் பாதையில் எந்த வழியாக வந்தார் என்பதை கண்டுபிடிக்க, ஞானபாரதி மெட்ரோ ரயில் நிலையம், அருகில் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை, மெட்ரோ ரயில் நிர்வாக ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.