புதுடில்லி : திகார் சிறையிலிருந்து, தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகவுள்ள கைதிகள் 52பேர், பெரிய நிறுவனங்களில் வேலைக்குச் சேர உள்ளனர். இவர்கள், சிறையில் நடந்த 'கேம்பஸ்' இன்டர்வியுவில் தேர்வாகி, புது வாழ்க்கையைத் துவக்க உள்ளனர்.
டில்லி, திகார் சிறைக் கைதிகள் தண்டனைக் காலத்தை முடித்து, விடுதலையாகிச் செல்பவர்கள், நன்கு படித்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைப்பதில்லை. இதைப் போக்கும் வகையில், பெரிய நிறுவனங்கள் திகார் சிறையில் முதல் முறையாக 'கேம்பஸ்' தேர்வு, கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. இதில், அகர்வால் பேக்கர்ஸ், ஜிந்தால் ஸ்டீல் மற்றும் பிளக்ஸ் ஷூ உள்ளிட்ட, பல பெரிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்தத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 43 பேர் தற்போது பணி செய்து, புது வாழ்க்கையைத் துவக்கியுள்ளனர் இந்நிலையில், தண்டனைக் காலம் முடிந்து, விடுதலையாகும் கைதிகளுக்காக, நேற்று இரண்டாவது 'கேம்பஸ்' தேர்வு, திகார் சிறையில் நடந்தது. இதில், ஒன்பது பெரிய நிறுவனங்கள் கலந்து கொண்டு, 52 கைதிகளை பணிக்குத் தேர்வு செய்தன.
திகார் சிறை காவல் அதிகாரி சுனில் குப்தா கூறுகையில்,'முதல் முறையாக நடந்த 'கேம்பஸ்' தேர்வு குறித்து செய்தி அறிந்த உடன், நகரில் உள்ள பல நிறுவனங்கள், திகார் சிறைக் கைதிகளை பணிக்குச் சேர்க்க ஆர்வமுடன் முன்வந்தன. இது எங்களுக்கு அதிக உற்சாகமூட்டும் வகையில் இருந்தது. நேற்று நடந்த இரண்டாவது 'கேம்பஸ்' தேர்வில், ஹால்திராம், வேதாந்தா குழு, ஜி.ஐ.பைப்ஸ், ராடோ செக்யூரிட்டி மற்றும் சிப்ரா உள்ளிட்ட, ஒன்பது நிறுவனங்கள் கலந்து கொண்டன. தகுதியுள்ள 80 கைதிகள் இந்தத் தேர்வில் பங்குபெற்றனர். இதில், 52 கைதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என்றார்.
திகார் சிறை கண்காணிப்பாளர் திவேதி கூறுகையில்,'சிறையில் உள்ள கைதிகள் படிப்பதற்கு, நான் ஊக்குவித்தேன். படிப்பது வீண் வேலை என்றே பல கைதிகள் கருதினர். ஆனால், கைதிகளில் வெகு சிலரே, இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படிக்க முன் வந்தனர். அவர்கள் படிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். படித்து முடிந்த பின், அவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் வேலை கிடைக்க, முயற்சி செய்யப்பட்டது. கடும் முயற்சிக்குப் பின், அதற்கான வெற்றி இந்த ஆண்டு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
'சிறையில் உள்ள கைதிகளில், பணிக்கானவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் திவேதியை சேர்ந்தது' என்கிறார் டி.ஜி., நீரஜ்குமார். 10 நிறுவனங்கள், சமீபத்தில் திகார் சிறைக் கைதிகள் சிலரை உயர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளன. 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை இவர்கள் ஆண்டு வருமானம் பெற உள்ளனர்.