| ADDED : நவ 21, 2025 06:36 AM
ஜம்மு: ஜம்முவில் உள்ள, 'காஷ்மீர் டைம்ஸ்' அலுவலகத்தில் புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று நடத்திய சோதனையில் ஏ.கே., ரக துப்பாக்கி குண்டுகள், கையெறி குண்டுகளில் பயன்படுத்தும், 'லீவர்'கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரில், 'காஷ்மீர் டைம்ஸ்' என்ற பத்திரிகை செயல்பட்டு வருகிறது. இந்த பத்திரிகையில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட செய்தி பொது அமைதியை குலைக்கும் வகையில் இருந்ததாக கூறி காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்த இப்பத்திரிகை அலுவலகத்துக்கு ஜம்மு - காஷ்மீர் அரசு சீல் வைத்தது. அதன்பின் ஜம்முவில் இருந்து, 'காஷ்மீர் டைம்ஸ்' இயங்கி வந்தது. இந்நிலையில், மீண்டும் நாட்டின் இறையாண்மையை குலைக்கும் முயற்சியில் இப்பத்திரிகை ஈடுபட்டிருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து காஷ்மீர் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். ஜம்முவில் உள்ள, 'காஷ்மீர் டைம்ஸ்' அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்தினர். அதில் ஏ.கே., ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், கைத்துப்பாக்கி தோட்டாக்கள், கையெறி குண்டுகளை வெடிக்க வைக்க பயன்படும், 'லீவர்'கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் கூறினர். மேலும், கணினியில் உள்ள, 'டிஜிட்டல்' ஆவணங்களையும் கைப்பற்றினர். இது குறித்து, 'காஷ்மீர் டைம்ஸ்' பத்திரிகை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: ஜம்முவில் உள்ள எங்கள் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனைகள், எங்களை ஒடுக்குவதற்கான அடுத்தக்கட்ட முயற்சி. ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு கேள்வி கேட்கும், துடிப்பான பத்திரிகை இன்றியமையாதது. அரசை விமர்சிப்பது நாட்டை வலுப்படுத்தும். பலவீனப்படுத்தாது. எங்களை அச்சுறுத்தி மவுனமாக்க செய்ய அரசு முயற்சிக்கிறது. நாங்கள் மவுனமடைய மாட்டோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.