| ADDED : டிச 29, 2025 07:29 AM
புதுடில்லி: நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் தேசிய நலன் மீது கொண்ட பற்று காரணமாக உயர் பதவியை அடைந்தவர் பிரதமர் மோடி என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டி உள்ளார்.குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள சன்ஸ்கர்தமில் நடைபெற்ற, பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட 'நமோத்சவ்' நிகழ்ச்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (டிசம்பர் 28) தொடங்கி வைத்தார். இதில், சுமார் 150 கலைஞர்கள் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது; இது ஒரு கலாசார நிகழ்ச்சி மட்டுமல்ல, இந்தியாவின் தன்னம்பிக்கை, உறுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. நமோத்சவ் என்பது கடந்த 11 ஆண்டுகளில், 140 கோடி இந்தியர்களிடம், நம் நாடு உலகில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று உறுதியான நம்பிக்கையைக் கொடுத்த ஒரு தலைவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. செயல், திட்டமிடல் மற்றும் ஒரு நபர் தனது முழு வாழ்க்கையையும் நாட்டுக்காக அர்ப்பணிக்கும்போது மட்டுமே இது சாத்தியமாகும்.பிரதமர் ஒரு சாதாரண தலைவர் அல்ல, உறுதியான நிலைப்பாடு கொண்ட ஒரு அசாதாரண ஆளுமை திறன் கொண்டவர். பல சூழ்நிலைகள் காரணமாக ஏராளமான தலைவர் உருவானாலும், நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் தேசிய நலன்கள் மீதான பற்று காரணமாக மிக உயர்ந்த பதவியை அடைந்த ஒரே தலைவர் மோடி மட்டும் தான். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இன்று 29 நாடுகளின் மிக உயரிய விருதுகளைப் பெற்ற பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இது 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த கவுரவம். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கடந்த 11 ஆண்டுகளில் 27 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். வீடுகள், இலவச கியாஸ் இணைப்பு, கழிப்பறைகள், சுத்தமான குடிநீர், வங்கிக் கணக்குகள் என நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளார். நமோத்சவ் இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பதாக அமையும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.