வெள்ளை அறிக்கை வெளியிட பா.ஜ., தலைவர் நெருக்கடி
மல்லேஸ்வரம்,: ''மாநில நிதி நிலை நன்றாக உள்ளதாக முதல்வர் சித்தராமையா கூறுகிறார். அப்படியானால் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தியுள்ளார்.மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:சட்டசபை தேர்தலின்போது, ஐந்து வாக்குறுதித் திட்டங்களுடன் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றவில்லை. இப்போது, புதிதாக வேறு திட்டங்களை அறிவிக்கப்போகிறீர்களா? 'கிரஹலட்சுமி' திட்ட பயனாளிகளுக்கு ஐந்தாறு மாதங்களாகவும்; 'அன்ன பாக்யா' திட்ட பயனாளிகளுக்கு நான்கு மாதங்களாகவும் நிதி வழங்கவில்லை. பாக்கி
பெண்களுக்கு இலவச பயணம் அளிக்கும் 'சக்தி' திட்டத்துக்காக, நான்கு போக்குவரத்துக் கழகங்களுக்கும் மாநில அரசு 7,000 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. மாநிலத்தின் ஐந்து எஸ்காம்களுக்கு, 'கிரகஜோதி' திட்டத்தின் கீழ், 6,000 கோடி ரூபாயை, மின்துறை வழங்க வேண்டி உள்ளது.மாநில அரசு அளித்த நெருக்கடியால் தான் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. வாக்குறுதித் திட்டங்களை நிறைவேற்ற நிதி வசூலிக்கவே, இத்தகைய சூழ்ச்சியில் மாநில அரசு இறங்கி உள்ளது.எஸ்.சி.பி., எனும் சிறப்பு நிதி திட்டம் மற்றும் எஸ்.டி.பி., எனும் பழங்குடியினர் துணை திட்ட நிதியை, வாக்குறுதித் திட்டத்துக்கு அரசு பயன்படுத்தி உள்ளது.லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல் வரும்போது, 'கிரஹலட்சுமி' திட்டப்பயனாளிகளுக்கு, இரண்டே நாட்களில் நிதி வழங்கப்படுகிறது. இப்போதும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்காக காத்திருக்கிறீர்களா; மாநில விவசாயிகளும், ஏழைகளும் பிச்சைக்காரர்கள் என்று நினைக்கிறீர்களா? உறங்கும் அரசு
கவுரவ நிதி கேட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை உங்களால் மூட முடியவில்லை. யார் காதில் பூ சுற்றுகிறீர்கள்? பொய் மேல் பொய் சொல்லி, குற்றம் செய்கிறீர்கள்.இந்த அரசு வந்த நாளில் இருந்து மாநிலத்தில் வறட்சி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்வதை மறந்து, அரசு உறங்கிக் கொண்டுள்ளது.உண்மையான நிலையை முதல்வர் சித்தராமையாவுக்கு அமைச்சர்கள் புரிய வைக்க வேண்டும். ஆனால், முதல்வரோ, தனது பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்திலேயே உள்ளார்.புதுடில்லி சென்ற அவரது ஆதரவாளர்கள், இன்னும் சில மாதங்களில் மாநிலத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்ததுடன், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.அவருக்கு ஆலோசனை வழங்குபவர்கள், அப்பதவிக்காக காத்திருக்கின்றனர் என்பதை அவர் உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.